தேசிய செய்திகள்
இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நிதின் கட்காரி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.  இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியது. 

இந்தநிலையில்,  இதற்கிடையே ராஜஸ்தான் மாநில பா.ஜனதா அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான வாட்வரியை குறைத்தது, இதனால் அங்கு ரூ. 2.5 குறைந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாய் குறைக்கப்படுகிறது, இது நாளை முதல் அமலுக்கு வரும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து சட்டீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி செய்தியார்களிடம் கூறியதாவது:

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.  ரூ 8 லட்சம் கோடிக்கு பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்கிறோம்.  நாட்டில் 5 இடங்களில் எத்தனால் தயாரிப்பு ஆலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்