இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் - பீதியில் மக்கள் தவிப்பு

இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் தவித்தனர்.;

Update:2018-10-03 04:45 IST
ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தின் டோங்கலா நகரை மையமாகக் கொண்டு கடந்த 28-ந் தேதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடலோர நகரமான பலுவில் சுனாமி ஏற்பட்டது. இதனால் அந்த நகரத்தை சேர்ந்தவர்களை சுனாமி அலைகள் வாரிக்கொண்டு போயின. கட்டிடங்கள் தரை மட்டமாகின. பாலங்கள் தகர்க்கப்பட்டன. சாலைகள் பிளவுபட்டன. கார், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி முடியவில்லை. இன்னும் நீடித்துக்கொண்டு இருக்கிறது. மலைபோன்று ஆங்காங்கே இடிபாடுகள் கிடக்கின்றன. அவற்றைத் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றன.

மத்திய சுலாவெசி பகுதியில் ஒரு தேவாலயம், நிலச்சரிவால் தரை மட்டமானதைத் தொடர்ந்து அங்கு இருந்து 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நில நடுக்கத்திலும், சுனாமியிலும் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 1,234 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல்களை மொத்தமாக அடக்கம் செய்கிற பணி நடந்து வருகிறது.

மற்றொருபக்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உணவுப்பொருட்களும், குடிநீரும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். மின்சார வினியோகம் இல்லை. தகவல் தொடர்பு வசதி முடங்கிப்போய் உள்ளது. சாலைகள் சீர் செய்யப்படவில்லை. போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது.

பலு நகரில் ஒரு கடை திறந்திருந்த நிலையில் அங்கு உணவுப்பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலையும் உருவானது. போலீசார் மீது பொதுமக்களில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஐ.நா. சபையின் மனித நேய அமைப்பு, இந்தோனேசியாவில் நில நடுக்கத்தாலும், சுனாமியாலும் பாதித்து 1 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் உதவிகளுக்காக காத்துக்கிடப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. சும்பா தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த தீவில் 7½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

நில நடுக்கம் ஏற்பட்டு வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பிற கட்டிடங்களும் குலுங்கின. அவற்றில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளுக்கு ஓட்டம் எடுத்தனர். திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்று அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் அடிக்கடி நகர்ந்து மோதுகின்ற இடத்தில் அமைந்துள்ளதால்தான் அங்கு நில நடுக்கம், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்