தேசிய செய்திகள்
வன்முறையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை - உத்தரபிரதேச அரசு அதிரடி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டோரை கண்டறிந்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை உத்தரபிரதேச அரசு தொடங்கி உள்ளது.
லக்னோ,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, மீரட், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போலீசார் நடத்திய தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

போராட்டத்தின் போது கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பஸ்கள், கார்கள், உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தாக்குதல்களில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 200-க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களை அடையாளம் காணும் பணியை போலீசார் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், கண்காணிப்பு கேமராக்களின் மூலம் இதுவரை 50 பேர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக அதிகாரி வி.பி.சிங் தெரிவித்தார்.

லக்னோ மாவட்டத்தில் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட 4 பேர் கொண்ட குழு ஒன்றை மாவட்ட நிர்வாகம் அமைத்து உள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் சேதங்களை மதிப்பிட்டு, அதற்கு காரணமானவர்களை கண்டறியும் பணி தொடங்கி உள்ளது.

வன்முறையில் ஈடுபட்டதால் கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்