தேசிய செய்திகள்
தமிழ் எழுத்தாளர் இமயம் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளர் இமயம் எழுதிய ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் இந்த சாகித்ய அகாடமி விருது, கடந்த 1955 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு தாமிர பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமயம் எழுதிய ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாகித்திய அகாடமியின் ‘யுவ புஸ்கர்’ விருது மர நாய் என்ற கவிதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் சக்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கோவேறு கழுதைகள்’ என்ற தனது முதல் நாவல் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் எழுத்தாளர் இமயம். இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை ஆகும். இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கழுதூரில் பிறந்தவர் ஆவார்.