எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-09-05 17:25 GMT
ஆடிஸ் அபாபா,

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தென் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

எஸ்.என்.என்.பி மாகாணத்தில் தாவ்ரோ மண்டலத்தில் 3 வீடுகள் தரை மட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. எஞ்சிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு எத்தியோப்பிய தலைநகர் ஆடிஸ் அபாபாவில் மலை போன்ற குப்பைக்கிடங்கில் நிலச்சரிவு ஏற்பட்டபோது 115 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்