எல்லையில் அத்துமீறலா? இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக, இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-05 17:39 GMT
இஸ்லாமாபாத்,

இந்தியா, பாகிஸ்தான் இடையே 2003–ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டு உள்ளது.

ஆனால் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் பழிபோடுவதை எப்போதும் வழக்கமாக கொண்டு உள்ளது. இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று முன்தினம் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ராவுப் என்பவர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த நாடு கூறுகிறது.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, தன் கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘2003–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு உள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை இந்தியா மதித்து நடக்க வேண்டும். செவ்வாய்க்கிழமையன்று நடந்த சம்பவம் மட்டுமல்லாது பிற சம்பவங்கள் குறித்தும் இந்தியா விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்தியப் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எழுத்தாலும், செயலாலும் மதித்து நடப்பதற்கு தகுந்த அறிவுரைகளை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்