உலக செய்திகள்
சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் 5 ஆண்டு சிறை ரூ.5.60 கோடி அபராதமும் விதிக்கப்படும்

சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்வது இந்தியாவில் பெருகி வருகிறது. அதே நேரத்தில் இப்படி கேலி, கிண்டல் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபியாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரியாத், சவுதி அரேபிய குற்ற வழக்கு பதிவு அலுவலகம் டுவிட்டரில் இது தொடர்பாக  வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ‘‘சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்து பதிவுகள் வெளியிட்டு, அதன் மூலம் பொது அமைதி, மத மதிப்பீடுகளுக்கு இடையூறு செய்தால் அது இணையதள வழி குற்றமாக கருதப்படும். இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 3 மில்லியன் ரியால் (சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும்’’ என கூறப்பட்டு உள்ளது.ஏற்கனவே மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.