ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்தனர். #JapanEarthquake

Update: 2018-09-08 06:34 GMT
டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் கடந்த 6-ந் தேதி அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புதையுண்டவர்களின் உடலை மோப்பநாய் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக பலர் வீடுகளை இழந்துள்ளனர். அதே போல் அட்ஷூமா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிக உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மீட்பு பணியில் 40,000 வீரர்களும், 75 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் 16000 பேர் வீடுகளை இழந்து பாதுகாப்பு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போல், 31000 வீடுகளில் தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதிகள் முழுவதும் ஸ்தம்பித்துள்ளதால் மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்