பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்பு

பாகிஸ்தானின் 13வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்கிறார்.

Update: 2018-09-08 07:32 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆரிப் ஆல்வி (வயது 69).  இவர் தந்தையை போன்று பல் மருத்துவராக உள்ளார்.  இவரது தந்தை டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி ஆவார். தேச பிரிவினைக்கு முன் இவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக விளங்கினார். அப்போது அவருக்கு நேரு எழுதிய கடிதங்களை குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி, பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிற முகமது அலி ஜின்னா குடும்பத்துக்கும் நெருக்கமானவர் என தகவல்கள் கூறுகின்றன.

ஆரிப் ஆல்வியின் முழுப்பெயர் டாக்டர் ஆரிப் உர் ரகுமான் ஆல்வி ஆகும். இவர் கராச்சியில் பிறந்தவர் ஆவார்.

பாகிஸ்தான் அதிபராக உள்ள மம்னூன் உசைனின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் 13வது ஜனாதிபதியாக ஆல்வி பதவியேற்கிறார்.  பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா, அரசியல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரான ஆல்வி, கட்சியின் பொது செயலாளராக கடந்த 2006ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்துள்ளார்.  அவர் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த பொது தேர்தலில் என்.ஏ.-247 (கராச்சி) தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்