உலக செய்திகள்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்

அமெரிக்காவில் அடிக்கடி நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அங்கு உள்ள மக்கள் இடையே மிகுந்த பதற்றத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
வாஷிங்டன்,
அலபாமா மாகாணம், ஆபர்ண் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நுழைந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.இதற்கு இடையே வாலிபர் ஒருவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலி ஆனார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் போலீசார் மீட்டனர். அவர்களில் 3 பேர் கிழக்கு அலபாமா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஒருவரின் உடல் நிலை மோசமாக உள்ளதால் அவர் பீட்மாண்ட் கொலம்பஸ் பிராந்திய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.