உலக செய்திகள்
இந்தியா- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியை நேரில் காணச்சென்ற விஜய் மல்லையா

இந்தியா- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியை விஜய் மல்லையா நேரில் சென்று பார்த்தார்.
புதுடெல்லி,

பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, நாடு கடத்தக் கோரும் வழக்கை எதிர்கொண்டு வருகிறார். வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரி சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள சிறைகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி விஜய் மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் போதிய பாதுகாப்பும், அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக விடியோவை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தை கண்டு ரசிப்பதற்காக விஜய் மல்லையா செல்வது போன்ற விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

அந்த விடியோவில், ஓவல் மைதானத்தின் நுழைவு வாயில் அருகே காரில் வந்திறங்கும் மல்லையா, அனுமதிச்சீட்டை காண்பித்து செல்வது,பதிவாகியுள்ளது. விஜய் மல்லையா கிரிக்கெட் போட்டியை பார்ப்பது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை மிக முக்கிய நபர்கள் அமரும் பகுதியில் இருந்து அவர் கண்டு ரசித்தது நினைவு கொள்ளத்தக்கது.