ஆப்கானிஸ்தான்: பாதுகாப்புப்படை வீரர்கள் 37 பேர் பலி - தலீபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 37 பேர் பலியாயினர்.

Update: 2018-09-10 23:00 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.

இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்