பிரேசிலில் கத்தி குத்துக்கு ஆளான அதிபர் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்; கருத்து கணிப்பில் தகவல்

பிரேசில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் ஜேர் பொல்சனாரோ கத்தி குத்துக்கு பின் நடந்த முதல் கருத்து கணிப்பில் அதிக வாக்கு சதவீதங்களை பெற்றுள்ளார்.

Update: 2018-09-11 02:23 GMT
பிரேசிலியா,

பிரேசில் நாட்டில் வருகிற அக்டோபரில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் சமூக தாராளவாத கட்சியை சேர்ந்த ஜேர் பொல்சனாரோ (வயது 63).

இனவெறிக்கு ஆதரவு நிலைபாடுகளால் பிரேசிலில் பலரது கோபத்துக்கு உள்ளாகி சர்ச்சைக்குரிய நபராக திகழ்ந்த இவருக்கு, சமீபகாலமாக ஆதரவு பெருகி வருகிறது. ‘பிரேசிலின் டிரம்ப்’ என்று வர்ணிக்கப்படும் இவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.  குற்றங்களை தடுப்பதில் வலிமையான தலைவராக இவர் இருப்பார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவரை ஒருவர் கத்தியால் வயிற்றில் குத்தினார்.  இதில் உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி நடந்த முதல் கருத்து  கணிப்பில் அவர் 24 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.  இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ் 13 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

கடந்த மாதம் நடந்த இதுபோன்ற கருத்து கணிப்பு ஒன்றில் ஜேர் 22 சதவீத ஆதரவு வாக்குகளை பெற்றார்.  இந்நிலையில், கத்தி குத்து சம்பவத்திற்கு பின்னர் அவருக்கு கூடுதலாக 2 சதவீத ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் செய்திகள்