தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்; அமெரிக்கா விருப்பம்

தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்கா தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளது.

Update: 2018-09-11 05:34 GMT

வாஷிங்டன்,

பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்ட வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ, அந்நாட்டில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அதிகம் செயல்பட வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசை வலியுறுத்தினார்.

தீவிரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 30 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அரசு சமீபத்தில் ரத்து செய்தது.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறும்பொழுது, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்ற அமெரிக்காவின் விருப்பத்தினை தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.

இந்த விவகாரம் (தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை) அமெரிக்காவுக்கு மிக முக்கியம் வாய்ந்தது.  இதனை பாகிஸ்தானின் புதிய அரசு கவனத்தில் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்