”கடனை செலுத்துவது தொடர்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன் ”லண்டனில் விஜய் மல்லையா பரபரப்பு பேட்டி

கடனை செலுத்துவது தொடர்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன் என்று லண்டனில் விஜய் மல்லையா கூறியுள்ளார். #VijayMallya

Update: 2018-09-12 13:47 GMT
லண்டன்,

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டைவிட்டு வெளியேறும் முன், கடனை செலுத்துவது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன்.  ஆனால் அந்த விவரங்களை வெளியிட முடியாது.   தனது 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று கடனை திருப்பித்தர தயாராக உள்ளேன். அதற்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் மனு தாக்கல் செய்து இருக்கிறேன்.

கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்தது. என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை.  அரசியலில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்