ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்துள்ளார்.

Update: 2019-01-01 14:34 GMT
இஸ்லாமாபாத்,

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள் வாங்கிய பிரபலங்கள் தொடர்பான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பெயரும் இடம்பெற்றது. இதனால், அவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்கம் செய்தது. அதே ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி, நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்தது.

இவற்றில், லண்டனில் 4 சொகுசு வீடுகள் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவாஸ் ஷெரீப்புக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய மகள், மருமகன் ஆகியோருக்கும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மீதி உள்ள 2 வழக்குகளையும் டிசம்பர் 24-ந் தேதிக்குள் முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்தது.

அதன்படி, 2 வழக்குகளிலும் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.  இதில், அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதால், அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார். 25 லட்சம் டாலர் (சுமார் ரூ.18 கோடி) அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நவாஸ் ஷெரீப் இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். மேல் முறையீட்டு மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை, கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்