நவாஸ் ஷெரீப் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது: மகள் மர்யம் நவாஸ்

நவாஸ் ஷெரீப் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவரைக்காண சிறைநிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் மர்யம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-12 04:00 GMT
லாகூர், 

அல் -அஸிஸியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவருக்கு உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், மருத்துவர்களை அனுமதிக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் அவரது மகள் மர்யம் நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

மர்யம் நவாஸ் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “  நவாஸ் ஷெரீப்புக்கு கையில் வலி ஏற்பட்டுள்ளது. இது ஆன்ஜினா( இதய நோய்)வாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதய மருத்துவ நிபுணர்கள் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்து இருந்தார். 

ஆனால், மர்யம் நவாஸ் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சிறைத்துறை மருத்துவர்கள், நவாஸ் ஷெரீப்பின் உடல் நலம் சீராக உள்ளது. அவரது உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். 69 வயதான நவாஸ் ஷெரீப், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 

நேற்று சிறைக்கு சென்று தனது தந்தையை பார்த்துவிட்டு வந்த மர்யம் நவாஸ், “ தனது தந்தைக்கு மருத்துவர் ரீதியாக மிகவும் தீவிர பிரச்சினைகள்  இருப்பதாகவும், சிறப்பான மருத்துவ வசதிகள் அவருக்கு தேவைப்படுகின்றன” எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்து இருந்தார். 

மேலும் செய்திகள்