நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

Update: 2019-03-16 23:15 GMT
கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டில் 49 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், கிறைஸ்ட்சர்ச் கோர்ட்டில் பயங்கரவாதி பிரெண்டன் டாரண்ட் ஆஜர்படுத்தப்பட்டான். கைவிலங்குடன் ஆஜர்படுத்தப்பட்ட அவனை அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அமைதிக்கு பெயர் பெற்ற நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு, அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் 49 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 48 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இது பயங்கரவாத தாக்குதல்தான் என்று அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.

இதில் முக்கிய குற்றவாளி என அறியப்படுகிற பயங்கரவாதி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டான்.

இந்த தாக்குதல்களில் பலியானவர்களில் பெரும்பாலோனோர், வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்துக்கு வந்து குடியேறியவர்கள் என தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் முதலில் அடையாளம் காணப்பட்டிருப்பவர், 1980-களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய 71 வயது தாவூத் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த துப்பாக்கிச்சூடுகளில் இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா நாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. பலியானவர்கள் அத்தனை பேரையும் அடையாளம் காணப்பட்ட பிறகுதான் இதை உறுதி செய்ய முடியும்.

மசூதி தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்துள்ள பயங்கரவாதி பிரெண்டன் டாரண்டிடம் போலீசார் முதல் கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். அவன் உடற்பயிற்சி பயிற்றுனராக பணியாற்றி வந்தவன்; பொது உடைமை எதிர்ப்பு கொள்கையை பின்பற்றுகிறவன்.

கிறைஸ்ட்சர்ச் கோர்ட்டில் நேற்று அவன் கைவிலங்கிடப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டான். நீதிபதி அவன் மீது கொலை குற்றச்சாட்டை மட்டும் பதிவு செய்தார். மற்ற குற்றச்சாட்டுகள் பின்னர் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுருக்கமாக நடந்த வழக்கு விசாரணையின்போது அவனை அடுத்த மாதம் 5-ந் தேதி நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் ஜாமீன் வழங்குமாறு கோரவில்லை.

பிரெண்டன் டாரண்டுடன் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

துப்பாக்கிச்சூடுகள் பற்றி பிரதமர் ஜெசிந்தா நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரெண்டன் டாரண்ட் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் துப்பாக்கி உரிமம் பெற்றிருக்கிறார். அதற்கு அடுத்த மாதம் முதலே சட்டப்பூர்வமாக துப்பாக்கி வாங்க தொடங்கி இருக்கிறார். 2 பகுதியளவு தானியங்கி துப்பாக்கிகள், 2 ‘ஷாட்’ துப்பாக்கிகள், ‘லிவர்’ கொண்டு இயக்கப்படுகிற ஒரு துப்பாக்கி என 5 துப்பாக்கிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவன் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இருந்துள்ளான். இங்கு இதற்கு முன்னர் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இனி இதை செய்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்தில் 16 வயதிலேயே ஒருவர் சட்டப்பூர்வமாக சாதாரண துப்பாக்கி வாங்க முடியும். 18 வயதில், பகுதியளவு தானியங்கி துப்பாக்கிகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்