இந்திப்பட டைரக்டர் மகேஷ் பட்டை கொல்ல சதி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் இந்தியரை அமெரிக்கா நாடு கடத்தியது
இந்திப்பட டைரக்டர் மகேஷ் பட்டை கொல்ல சதி செய்தது உள்பட பல்வேறு கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்படும் இந்தியரை அமெரிக்கா, இந்தியாவுக்கு நாடு கடத்தியது.;
நியூயார்க்,
இந்தியாவை சேர்ந்தவர் உபயதுல்லா அப்துல்ரஷீத் ரேடியோவாலா (வயது 46). கடந்த 2014-ம் ஆண்டு, பிரபல இந்திப்பட இயக்குனர் மகேஷ் பட்டை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, இந்திப்பட அதிபர் கரிம் மொரானி மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஆகிய வழக்குகளில் இவர் முக்கிய குற்றவாளி ஆவார்.
ஆனால், அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு எதிராக மராட்டிய அமைப்புரீதியான குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்ட கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதையடுத்து, சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில், 2015-ம் ஆண்டு, உபயதுல்லாவுக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
கைது
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிய குற்றத்துக்காக, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணம் ஐஸ்லின் நகரில் உபயதுல்லா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், உபயதுல்லாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அமெரிக்க குடியேற்றப்பிரிவு நீதிபதி சமீபத்தில் உத்தரவிட்டார். அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாடு கடத்தல்
இதையடுத்து, உபயதுல்லா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில், கொலை முயற்சி, குற்றச்சதி, கொள்ளை, திருட்டு, மோசடி, ஏமாற்றுதல், கள்ள துப்பாக்கிகள் வைத்திருத்தல், கிரிமினல் கும்பலை உருவாக்கும் பணியில் தகவல்களை பகிர்ந்து கொள்ள இணையதளத்தை பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக இந்தியாவால் உபயதுல்லா தேடப்பட்டு வருகிறார். அவரால் அமெரிக்காவுக்கும் ஆபத்து” என்று கூறப்பட்டுள்ளது.