ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-04-22 23:15 GMT
வாஷிங்டன்,

ஈரானின் அணுஆயுத உற்பத்தியால் கோபம் அடைந்த அமெரிக்கா, கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறியது. அத்துடன், ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும்விதமாக, ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டியது.

இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளித்தது. இருப்பினும், இந்த நாடுகள் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்த 6 மாத கெடு, மே 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை இனிமேலும் நீட்டிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இத்தகவலை வெள்ளை மாளிகை அதிகாரி சாரா சாண்டர்ஸ் நேற்று அறிவித்தார். ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரத்தை ஒழிக்கும்வகையில், இந்த முடிவை டிரம்ப் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் முடிவால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆய்வு செய்து வருவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க முடிவை ஏற்றுக்கொண்டால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். ஒருவேளை ஏற்காவிட்டால், அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்