மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கு; தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் கைது

மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-07-24 05:49 GMT
சாராஜிவோ,

ஆர்செலார் மிட்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல்.  இந்திய தொழிலதிபரான இவர், ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய பால்கன்ஸ் தீபகற்ப பகுதியில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.  இவற்றில் ஒன்று ஜி.ஐ.கே.ஐ.எல். நிறுவனம் ஆகும்.  இதன் கண்காணிப்பு வாரிய தலைவராக பிரமோத் இருந்து வருகிறார்.

கடந்த 2003ம் ஆண்டில் லுகாவாக் நகரில் அமைக்கப்பட்ட இந்நிறுவனத்தில் ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்களை செய்த சந்தேகத்தின் பேரில் போஸ்னியா நாட்டில் வைத்து பிரமோத் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவருடன் நிறுவன உயரதிகாரிகளான பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் கண்காணிப்பு வாரியத்தின் மற்றொரு உறுப்பினர் என இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் 4வது நபர் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  வழக்கில் சந்தேகம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 45 வருட சிறை தண்டனை கிடைக்கும்.  இவர்கள் இன்று நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்