2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்சு சென்றடைந்தார்.

Update: 2019-08-22 16:13 GMT
பாரீஸ்,

2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்சு சென்றடைந்தார்.  இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார். 

பாரிஸ் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடுவோர்டு பிலிப் ஆகியோரை பிரதமர் மோடி  சந்தித்து பேச உள்ளார். 

நாளை பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து கடந்த 1950 மற்றும் 1966-ம் ஆண்டுகளில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவுச்சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு,  பிரான்சில் இருந்து பிரதமர் மோடி அமீரகத்துக்கு புறப்படுகிறார். அங்கிருந்து 24-ந்தேதி பக்ரைன் செல்லும் பிரதமர், 25-ந்தேதி மீண்டும் பிரான்சின் பியாரிட்ஸ் நகருக்கு செல்கிறார். அங்கு 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினர் இல்லை என்றாலும், நட்பு நாடு என்ற முறையில் இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த 2 நாள் மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநாட்டுக்கு இடையே ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித் தனியாக பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்