அமெரிக்காவில் சட்ட பத்திரிகை தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய-அமெரிக்கர் நியமனம்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மிக பழமை வாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய-அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2023-02-06 05:38 GMT


நியூயார்க்,


அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்வர்டு சட்ட பள்ளியின் ஒரு பகுதியாக கடந்த 1887-ம் ஆண்டு முதல், சட்டம் பயில கூடிய மாணவ மாணவியர்களால் சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் பத்திரிகை ஒன்று வெளிவர தொடங்கியது.

இது, உலக அளவில் அதிக வாசகர் வட்டங்களை கொண்டுள்ளது. அதனால், விற்பனையிலும் முன்னணியில் உள்ளது. இதன் 137-வது தலைவராக இந்திய அமெரிக்கரான அப்சரா ஐயர் என்பவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

136 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அமெரிக்கர் ஒருவர், கவுரவம் வாய்ந்த இந்த பொறுப்பை ஏற்பது இதுவே முதன்முறையாகும். ஹார்வட்டு சட்ட பள்ளியின் 29 வயது மாணவியான அப்சரா, 2018-ம் ஆண்டில் இருந்து கலை பொருட்கள் சார்ந்த குற்ற பிரிவில் புலனாய்வு மேற்கொள்வது மற்றும் அவற்றை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பது ஆகிய பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் யேல் பல்கலை கழகத்தில் பொருளாதாரம் மற்றும் கணிதவியலில் பட்டப்படிப்பு படித்து உள்ளார். ஸ்பானிஷ் மொழியிலும் பட்டம் வாங்கியுள்ளார்.

தொல்லியல் துறையில் கொண்ட ஆர்வத்தினால், ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் அவர் எம்.பில் படிப்பை தொடர்ந்து உள்ளார். 2018-ம் ஆண்டில் மேன்ஹேட்டன் மாவட்ட வழக்குரைஞரின் கலை பொருட்கள் கடத்தல் பிரிவில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த பிரிவில் அவர் கலை பொருட்கள் சார்ந்த குற்றங்களை அலசி ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். சர்வதேச மற்றும் மத்திய சட்ட அமலாக்க துறை அதிகாரிகளுடன் இணைந்து, 15 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 1,100-க்கும் மேற்பட்ட கொள்ளை போன கலை பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப கூடிய புலனாய்வு பணியில் ஒருங்கிணைந்து பணியாற்றி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்