அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 4 பேர் காயம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

Update: 2023-02-06 00:58 GMT



வாஷிங்டன்,


அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாலை 12.50 மணியளவில் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன. இதனை தொடர்ந்து, ஷெரீப் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

இதில், சம்பவ பகுதியில் இருந்து காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். எனினும், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி ஷெரீப் அலுவலகம் கூறும்போது, பாயிண்ட் ரெயீஸ் டிரைவ் பகுதியில் எண்ணற்ற துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டு உள்ளன. இந்த தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது தெரியவில்லை. இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

எனினும், கடந்த சனிக்கிழமை பாட்டர் டிரைவ் பகுதியில் நடந்த கார் கடத்தலுக்கும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர் என தெரிவித்து உள்ளது.

சம்பவம் நடந்தபோது, குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் ஏதேனும் புகைப்படங்கள் இருக்கின்றனவா? என்றும் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகம் கேட்டு கொண்டு உள்ளது. அவர்களது விசாரணை அதிகாரிகளுடன், கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையும் இணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்