ரியல் எஸ்டேட் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு
இந்திய ரியல் எஸ்டேட் துறை கடந்த 25 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.;
சொந்த வீடு என்ற கனவு அனைவருக்கும் சாத்தியமாகும் நிலை உருவாகி இருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்திய அளவில் ஏழு முக்கிய நகரங்களில் புதிய வீடுகளுக்கான தேவை வழக்கத்தைவிட சுமார் 30 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 68 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் வரை கட்டப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த திட்டத்தின் கீழ் 2017-18 ஆண்டில் நகர்ப்புற வீடு வழங்கும் திட்டத்தில் சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 3 லட்சம் குறைந்த விலை குடியிருப்புகளுக்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களிலிருந்து கடன் பெற்றவர்கள், வீடு கட்டுவதற்கு முன்னரே அதற்கான தவணைத் தொகையை செலுத்துகிறார்கள். நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முதலீடு என்பது அவர்கள் வாங்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது தனி வீடு ஆகியவைதான். இந்த நிலையில், சொந்த வீடு வாங்குபவர்களுக்குச் சாதகமாக சமீபத்தில் இரண்டு முக்கியமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை வீடு வாங்குவோர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் முதலாவது, கட்டுமான பணிகளின் தாமதம் காரணமாக குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளருக்கு வீடு வழங்குவதில் தாமதம் ஆனதால் ஏற்பட்ட பிரச்சினையில் மும்பை வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் அளித்துள்ள முக்கியமான தீர்ப்பு ஆகும்.
நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அந்த தீர்ப்பு இருப்பதாகவும், இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையைச் சீரமைப்பதுடன், அதன் ஒழுங்காற்று ஆணையம் மூலம் புதிய சட்டங்களையும், விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் வகையிலும் அந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாவது, கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் என்பது வாங்குபவருக்கும், விற்பவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லவிட்டால், 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அது தவறான வணிகமுறையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஆகும். இந்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாகவும், வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பை அளிப்பதாகவும் பலரது கருத்தாக உள்ளது.