ஆன்மிகம்
அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை

அட்சய திருதியை வந்துவிட்டாலே ஏதாவது ஒரு மங்களப் பொருளை வாங்க வேண்டும் என்று சொல்வார்கள்.
‘அட்சம்’ என்றால் ‘வளர்ந்து பெருகுவது’ என்று பொருள். எனவே, அன்றைய தினம் பொன், பொருள், பூமி, ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றில் ஒன்றை நல்ல நேரம் பார்த்து வாங்கினால், அது மென்மேலும் அபிவிருத்தியாகும் என்பது நம்பிக்கை.

சமீப காலத்தில் அட்சய திருதியை பிரபல மாகிவிட்டது. விலைவாசி விண்ணை நோக்கிச் செல்லும் இந்த காலத்தில், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எல்லாராலும் வாங்க இயலாது. அந்த நிலையில் இருப்பவர்கள் மங்களப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கலாம். அல்லது அந்த நேரத்தில் பூஜை அறையில், சுவாமி படத்தின் முன்பாக சிறிய தொகையை வைத்து வழிபாடு செய்யலாம்.

ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3-வது திதியாக ‘திருதியை’ திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே ‘அட்சய திருதியை’ என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக் கான அட்சய திருதியை 29.4.2017 (சனிக் கிழமை) அன்று வருகிறது. குபேரன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப்பெற்ற தினம் இந்த அட்சயத் திருதியை என்று புராணங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல் கிருஷ்ண பகவானுக்கு, அவல் கொடுத்து குசேலன் குபேரன் ஆனதும் இந்த நன்னாளில்தான். பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். அதுவும் இதே நாளில்தான். எனவே அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது.

ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.