கஷ்டங்களைப் போக்கும் கவுரி அம்மன்

பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது.

Update: 2017-04-28 00:30 GMT
பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இதில் கேதாரம் என்பது சிவனையும், கவுரி என்பது பார்வதியையும் குறிக்கும். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இது ‘கேதார கவுரி விரதம்’ என அழைக்கப்பட்டது. கவுரி தேவி, 16 விதமான பெயர்களில் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

ஞான கவுரி

ஒரு முறை, சிவத்தை விட சக்தியே சிறந்தது என்று பார்வதிதேவி எண்ணினாள். இதனால் சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. இதைக் கண்ட பார்வதி தேவி, உலகில் சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். இதையடுத்து அன்னையை தன்னுடைய உடலில் சரி பாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கினார்.  அன்னை ஞான கவுரியானாள். இந்த ஞான கவுரியை, பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கிறாள்.

அமிர்த கவுரி

தேவலோகத்தில் அமிர்தம் என்ற ஒன்று உண்டு என்கிறது புராணம். அது உயிர்களுக்கு குறையாத ஆயுளைத் தருவதாகும். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவியானதால் கவுரிக்கு ‘அமிர்த கவுரி’ என்று பெயர். இந்த அன்னையை ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரி அம்சம் பொருந்தியவள். அங்குள்ள கள்ளவாரணப் பிள்ளையார் ‘அமுத விநாயகர்’ ஆவார்.

சுமித்ரா கவுரி

உலக உயிர்களின் சிறந்த நண்பன், இறைவனே. சுந்தரரின் தோழனாக ஈசன் அருள்பாலித்ததும், இறைவன் நடத்திய திருவிளையாடல்களுமே இதற்கு சாட்சியம் கூறும். ஈசனைப் போலவே உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.

சம்பத் கவுரி

மனித வாழ்வுக்கு அவசியமானது உணவு, உடை, உறைவிடம். பழங்காலத்தில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் உயர்ந்த செல்வங்களாக போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. இந்த அன்னை பசுவுடன் காட்சி அளிப்பாள். இந்த அன்னையே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடை நாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத் கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. காசி அன்னபூரணியையும் சம்பத் கவுரி என்பார்கள். இந்த அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.

யோக கவுரி

யோக வித்தையின் தலைவியாக ‘மகா கவுரி’ திகழ்கிறாள். இவளையே யோக கவுரி என்று அழைக்கிறார்கள். மகா சித்தர் என்று போற்றப்படும் ஈசனுடன், யோகேஸ்வரியாக இந்த அன்னை வீற்றிருப்பாள். காசியில் இவர்கள் இருக்கும் பீடம், ‘சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்தர்களின் யோகங்களை அருளும் யோகாம்பிகையாக இந்த அன்னை திகழ்கிறாள். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை ‘யோக விநாயகர்’ என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகர், யோக கணபதி ஆவார். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை ‘யோக கவுரி’ சொரூபமானவள்.

வஜ்ர ச்ருங்கல கவுரி

உறுதி மிகுந்த உடல் கொண்டவர்களை, ‘வஜ்ர தேகம் கொண்டவன்’ என்று கூறுவார்கள். அத்தகைய உடலை, உயிர்களுக்கு தரும் தேவியை, ‘வஜ்ர ச்ருங்கல தேவி’ என்று அழைக்கிறார்கள். இந்த அன்னை அமுத கலசம், சக்கரம், கத்தி, நீண்ட சங்கிலி போன்றவற்றை கையில் ஏந்தியபடி, கருட வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். ‘ச்ருங்கலம்’ என்பதற்கு, ‘சங்கிலி’ என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், ‘வஜ்ர ச்ருங்கல கவுரி’ என்கிறார்கள். இந்த அன்னையை வழிபட்டால் முக்தி கிடைக்கும். இந்த அன்னையுடன் இருப்பவரை சித்தி விநாயகர் என்று கூறுவார்கள்.

மோகன கவுரி

துன்பத்திற்கு காரணம் ஆசைதான். அந்த ஆசையின் வலையில் சிக்காமல் இருக்க இந்த கவுரிதேவியை வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிப்பவள் இந்த அன்னை. இவளுடன் த்ரைலோக்கிய (மோகன) கணபதி வீற்றிருக்கிறார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோகன) கவுரி அருள்பாலிக்கிறாள்.

சுயம் கவுரி

சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் அருள்கிறாள், இந்த கவுரி தேவி. திருமணத் தடையால் வருந்துபவர்கள், சுயம் கவுரி தேவியை வழிபடலாம். ருக்மணி, சீதை, சாவித்திரி போன்ற புராண கால பெண்களின் கவுரி பூஜை, இந்த அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடியவை. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்திரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

கஜ கவுரி

பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கிறாள்  கஜகவுரி தேவி. இந்த அன்னையை ஆடி மாத பவுர்ணமியில் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் இந்த கவுரிதேவிக்கு பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் கஜ கவுரியை தரிசிக்கலாம்.

விஜய கவுரி

ஒருவன் செய்த நற்செயல்களால், அவன் பெரிய புகழை அடைந்திருக்கலாம். ஆனாலும் அந்த புகழின் முழுமையான பயனை அனுபவிக்க இந்த விஜய கவுரி அன்னை அருள் வழங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

சத்யவீர கவுரி

இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். பலரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கு நல்ல மனமும் அவசியமானது. அத்தகைய மனப்பாங்கை அருள்பவளே ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்கின்றனர்.

வரதான கவுரி

பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப்படுகிறாள். இந்த அன்னை கொடை வள்ளல் களின் கரத்தில் குடியிருப்பவள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. காஞ்சியிலும் அறம் வளர்த்த நாயகியைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சொர்ண கவுரி

ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் சொர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் பலரும் அதனை பூஜித்தனர். அப்போது அந்த லிங்கத்திற்குள் இருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சொர்ணவல்லி என்று  தேவர்கள் போற்றினார்கள். சொர்ண கவுரியை வழிபடுவதால் தோ‌ஷங்கள், வறுமை நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சொர்ண கவுரி விரதத்தை, ஆவணி வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும்.

சாம்ராஜ்ய மகா கவுரி

அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

அசோக கவுரி

அசோகசாலம் என்பதற்கு துன்பமற்ற இடம் என்பது பொருள். அதுவே இந்த தேவியின் பட்டணமாகும். இங்கு இருக்கும் கவுரி, ‘அசோக கவுரி’ என்று அழைக்கப்படுகிறாள். சித்திரைவளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வைப் பெறலாம். இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

விஸ்வபுஜா மகா கவுரி

தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசே‌ஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

மேலும் செய்திகள்