நற்செய்தி சிந்தனை : நட்பின் மேன்மை

இந்த வாரச் சிந்தனையாக, “யோவான்” அவர்களின் நற்செய்தியை விளக்குவோம்.

Update: 2017-05-02 07:19 GMT
ந்தக் காலத்தில் இயேசு பிரான் தன் சீடரை நோக்கி, “என் தந்தை என் மீது அன்பு கொண்டது போல், நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நீங்கள் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல, நீங்களும் ஒருவர் மற்றொருவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளையாகும்”.

“நம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு வேறில்லை. நான் கட்டளையிடுவதையெல்லாம் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்”.

“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால், நம் ‘தலைவர்’ செய்வது இன்னதென்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் ‘நண்பர்கள்’ என்றேன். ஏனெனில் என் தந்தையிடம் இருந்து கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் ‘கனி’ தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும், உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால், தந்தையிடம் கேட்பதையெல்லாம், அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்”.

இந்த நற்செய்தியைக் கொஞ்சம் அலசி ஆராய்வோம்.

‘பணியாளர்’, ‘நண்பர்’ என்ற இரண்டுக்கும் இயேசு பிரான் வேறுபாடு காட்டுகிறார்.

பணியாளர் பற்றிக் குறிப்பிடும்பொழுது, பணியாளருக்கு ‘தலைவர்’ என்ன செய்கிறார் என்பதே தெரியாது.

‘நட்பு’ என்பதும், ‘நண்பர்கள்’ என்பதும் அப்படிப்பட்டதல்ல என்கிறார். நண்பன் என்பவன், நெருக்கமானவன் ஆகி விடுகிறான். ஆகவேதான் உரிமை காரணமாக அந்தச் சொல்லை இயேசு பிரான் பயன்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக அன்பைப் பற்றி பேசுகிறார்.

‘நான் தந்தையிடம் இருந்து பெற்றவைகள் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை’.

நீங்கள் கனி தர வேண்டும். அதுமட்டுமல்ல. நீங்கள் தரும் கனியானது நிலைத்திருக்க வேண்டும்.

என் பெயரால் நீங்கள் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குப் பெற்றுத் தருவார். இதற்கெல்லாம் அடிப்படை அன்பு அல்லவா?

‘தன்னைப் போல் பிறரையும் நேசி’ என்பதுதான், இயேசு பிரானின் அடிப்படைத் தத்துவம்.

நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும். இதுதான் உண்மையான அன்பு என்று போதிக்கிறார்..

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற திருக்குறளை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

இடையில் உடுத்தி இருக்கும் ஆடை, கழன்று விடப் போகிறது என்பதை, தன்னையும் அறியாமல் உணர்ந்த கையானது எப்படி அத்துன்பத்தைக் களைய, விரைந்து செயல்படுகிறதோ, அதைப்போல தன் நண்பனுக்குத் துன்பம் என்று வந்தவுடன், உடனே ஓடிச் சென்று காப்பதே, ‘நட்பு’ என்று இதற்கு அர்த்தம்.

நட்பின் வலிமை பற்றி பேசாத இலக்கியங்கள் கிடையாது. நட்புக்கு ஈடு இணை கிடையாது என்பதை உணர்ந்துதான், ‘நண்பர்கள்’ என்ற வார்த்தையை இயேசு பிரான் பயன்படுத் துகிறார். தலைவரின் எண்ணமும் செயலும் நண்பர்கள்தான் அறிவார்கள். பணியாளர்கள் அறிய மாட்டார்கள்.

நட்பு ஆழமானது; புனிதமானது. நாமும் நட்பின் மேன்மையைப் புரிந்து கொள்வோம். நட்பின் புனிதத்தைப் பிறரிடமும் பகிர்ந்து கொள்வோம். நட்பின் ஆழத்தை உணர்ந்து நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம். நட்பு என்பது இரு பக்கமும் அதாவது நட்பைப் பெறுவோரும், நட்பை வழங்குவோரும் நாணயத்தின் இரு பக்கமாய் இருந்து வாழ வேண்டும். நட்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அடிப்படைத் தத்துவம்.

நட்புக்கு அடித்தளமாக அமைவது அன்பு ஆகும். அன்பானது அகத்தில் இருந்து வெளிவர வேண்டும். நண்பர் களுக்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு வேறு கிடையாது என்று கூறுகிறார். அதற்காக இயேசு பெருமான் சொல்லும் வார்த்தையைக் கவனியுங்கள்.

‘நான் கட்டளையிடுவதையெல்லாம் செய்தால், நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்’ என்று கூறுகிறார்.

பணியாளருக்கும், நண்பர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறார். முதலில் நண்பர்களாக ஆக்கிக் கொள்கிறார். அதற்கு அடுத்தாற்போல் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

‘என் தந்தையிடம் இருந்து கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். ஆனால் நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்’ என்றும் கூறுகிறார்.

தலைவர், பணியாளர் என்ற உறவு, நெருக்கம் காரணமாக இருக்க முடியாது. நட்பு ஒன்றுதான் நெருக்கம் காரணமாக இருக்க முடியும். ஆகவே பணியாளர், தலைவர் என்ற உறவை ஏற்படுத்த இயேசு பெருமான் விரும்பவில்லை. நண்பன் என்ற உறவைத்தான் ஏற்படுத்த விரும்புகிறார்.

உரிமை காரணமாக வருவது, அன்பு. அந்த அன்பில் விளைவது நட்பு. உண்மையான நட்பு, பகை கொள்ளாது. வேறுபாடு காட்டாது. அன்பை மேலும் மேலும் செழிக்கச் செய்யும். அன்பால் விளையும் அந்த நட்பு உயிரையும் கொடுக்க துணையாக அமையும்.

இந்த நற்செய்தியைப் படிப்போர் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாமும் அன்பைப் பெருக்குவோம். ஒருவரோடு ஒருவர் அன்பால் இணைந்து வாழ்வோம். இதுவே இயேசு பெருமான் மக்களுக்குக் கொடுத்த நற்செய்தி. 

மேலும் செய்திகள்