திருமண வரம் அருளும் குரு பகவான்

மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்கிறார்கள்.

Update: 2017-05-22 23:00 GMT
னிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்கிறார்கள். பிரம்ம தேவரின் மானச புத்திரர் களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் குரு பகவான். இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக ‘பிரகஸ்பதி’ என்று அழைக்கப்பட்டார். பிரகஸ்பதி என்ற சொல்லுக்கு ‘ஞானத் தலைவன்’ என்று பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், குரு, வியாழன் என பல பெயர்கள் உண்டு.

பிரகஸ்பதி, காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார். இவருக்கு எம கண்டன், கசன் என்ற இரண்டு புதல்வர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை ‘பொன்னன்’ என்றும், ‘வியாழன்’ என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர்.

குரு பகவானின் 5, 7–ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம். தன்னை வழிபடுபவர்களுக்கு உயர்வான பதவியையும், மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் அருள் பூரணமாக இருந்தால், அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். கடல் கடந்து சென்று செல்வம் தேடி செல்வந்தர் ஆகும் சூழ்நிலையும் ஏற்படும்.

வியாழ பகவான் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவார். கமண்டலம், அட்சமாலை, யோக தண்டத்தை தாங்கி, அபய முத்திரையுடன் அருள்புரிவார். இவருக்கு பிடித்த உலோகம் தங்கம். ஜாதக ரீதியான பல்வேறு தோ‌ஷ அமைப்புகளை ஏற்படுத்தும் கிரகங்கள், ராசிகள், கிரகக்கூட்டணிகள், அசுப ஸ்தானங்கள் ஆகியவற்றை தமது பார்வை பலத்தால் நன்மை செய்துவிடுவார்.

யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, பிடித்த உணவு கொண்டைக் கடலை தானியம். இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள். நவ ரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிந்திருப்பவர். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு சுவை பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பார். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் இவர் அதிபதி என்பதை எடுத்துக் காட்டும் அடையாளம் அவை.

நீதி சாஸ்திரங்களை அறிந்த குரு பகவான் ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்பதை நிர்ணயம் செய்வார்.

அரசியல் தலைவர்கள், அமைப்பு ரீதியான தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், ஆன்மிகம் சார்ந்த அமைப்பு களை வழிநடத்தும் துறவிகள் ஆகிய பல்வேறு வி‌ஷயங்களை குரு பகவான் தமது நிலைக்கேற்ப வெளிப்படுத்துகிறார்.

வியாழக்கிழமை விரதம்

ஆங்கில தேதிகளான 3, 12, 21, 30 ஆகியவற்றிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் தனுசு, மீன ராசிகளிலும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குருவின் குரு அம்சத்தை பிறவியிலேயே பெற்றவர்கள் ஆவார்கள். ‘வியாழக்கிழமை விரதம்’ எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.

 குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். ராசி சக்கரத்தை கடக்க பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்’ நடைபெறுகிறது. இதையே ‘மாமாங்கம்’ என்று சொல்வார்கள்.

ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலோ, குரூரமானவராக இருந்தாலோ, வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை பூஜிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு குரு திசையே ஆரம்பமாக நடக்கும். மே‌ஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு குரு சுப ஸ்தானங் களில் வலுப்பெற்றிருந்து தசை நடைமுறைக்கு வருமானால் யோகமான பலன்களை அளிப்பார்.

குரு தசை நடைமுறை முறையில் இருக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க அதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு அர்ச்சனை செய்து வரவேண்டும்.

மஞ்சள் நிற உடைகளை அணிவதாலும், புஷ்பராக மணியை தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வதாலும், கொண்டைக்கடலை தானியத்தை தானம் கொடுப்பதாலும், குருவார விரதம் இருப்பதாலும் குருதோ‌ஷம் நிவர்த்தியாகும்.

குருவார விரத வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் தொடங்கி செய்வது சிறப்பானது. சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை தொடங்க வேண்டும்.

தட்சிணாமூர்த்தியின் திருஉருவப்படம் அல்லது தங்களது ஆன்மிக குருவின் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் தெய்வ படங்களை மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து, ஆறு தீபங்களை அகல் விளக்காக ஏற்றி வைக்க வேண்டும். இனிப்பு கள், முல்லை மலர்கள், கொண்டைக் கடலை, சர்க்கரை பொங்கல், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து தூப, தீப, கற்பூர ஆராதனைகள் செய்து குரு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்தபடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அன்று ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த விரதம் மூலம் குருவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

குரு பகவான் அருளைப்பெற தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கும் திட்டை குரு பகவான் ஆலயம் சென்று வழிபடலாம். வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து சிவனை பூஜித்ததால் வசிஷ்டேஸ்வரர் எனப்பெயர் பெற்றார். அம்பாள் நாமம் உலகநாயகி. குரு பகவானை வசிஷ்ட மகரிஷி ராஜ குருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இங்கு வேண்டிக்கொள்ள குரு தோ‌ஷம் நீங்கும். கல்வி செல்வங்களில் சிறக்கலாம்.

குரு பகவானுக்கு  திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு வந்து வணங்கி வழிபட்டு நலம் பெறலாம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் குரு தலமாகும். அங்கு அவசியம் சென்று தரிசிக்க வேண்டும். கும்பகோணம் மகாமக பொற்றாமரைக் குளத்தின் வடக்கே சோமேஸ்வரர் கோவில் உள்ளது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள காசிவிஸ்வநாதர், விசாலாட்சியை வணங்கி நலம்பெறலாம்.

தன்னை வழிபடுபவர்களுக்கு, உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை அருள்பவர் குரு பகவான். அதோடு, கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இவரை வேண்டினால் தீர்வு கிடைக்கும்.  வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம் சாத்தி, தானியம் வைத்து வழிபட்டால் நன்மைகள் நம்மை நாடி வரும்.

குரு விரத பலன்கள்

வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோ‌ஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு சுலோகம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ


குரு மந்திரம்

‘தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்’


குரு பகவான் காயத்ரி

‘வரு‌ஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்’

மேலும் செய்திகள்