ஆன்மிகம்
வாழ்வை வளமாக்கும் துரியோதனன் ஆலயம்

மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கர்ணனுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் சிறப்புக்குரியவன் என்று பாராட்டப்பட்டாலும், அவனைத் தீயவழியில்செல்பவன், கொடூரமானவன் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கர்ணனுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் சிறப்புக்குரியவன் என்று பாராட்டப்பட்டாலும், அவனைத் தீயவழியில்செல்பவன், கொடூரமானவன் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவனிடமும் சில நல்ல குணங்கள் உண்டு என்பதை எடுத்துக் காட்டும் விதமாக, கேரளா மாநிலம், பொருவழி எனுமிடத்தில் துரியோதனனுக்குத் தனிக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

தல வரலாறு

பாண்டவர்களைத் தேடிப் பல்வேறு காடுகளின் வழியாகப் பயணித்து வந்த துரியோதனன், தென்பகுதியிலிருக்கும் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனுக்கு அதிக தூரம் நடந்து வந்த களைப்பால் தாகம் ஏற்பட்டது.  தாகத்தைத் தணிக்க தண்ணீரைத் தேடினான். சிறிது தொலைவில், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி ஒன்று இருப்பது தெரிந்தது. அந்தக் குடியிருப்பு பகுதியை நோக்கிச் சென்றான் துரியோதனன்.

கடுத்தம்சேரி கொட்டாரம் என்றழைக்கப்பட்ட அந்தப் பகுதி யில், தாழ்த்தப்பட்ட குரவா வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பாக போய் நின்ற துரியோதனன், குடிக்கத் தண்ணீர் தரும்படி கேட்டான்.

வீட்டிலிருந்து வெளியில் வந்த வயதான பெண்மணி, அவனுக்குத் தண்ணீர் தர மறுத்தாள்.

துரியோதனன், ‘அம்மா! வீடு தேடி வந்து தாகத்திற்காக தண்ணீர் கேட்பவருக்கு, இல்லை என்று கூறுவது சரியாகுமா?’ என்று கேட்டான்.

அதைக் கேட்ட அந்தப் பெண், ‘ஐயா! தங்களைப் பார்த்தால் உயர்ந்த வகுப்பினர் போல் தெரிகிறது. உயர் வகுப்பினருக்குத் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த நான் தண்ணீர் கொடுத்தால், எனக்குத் தண்டனை கிடைக்கும்’ என்றாள்.

‘அம்மா, பசியும் தாகமும் சாதியற்றவை. நான் அஸ்தினா புரத்து அரசன். எனக்கு இந்த வேளையில் தாங்கள் கொடுக்கும் தண்ணீரே என் உயிரைக் காக்கும். எனக்கு ஏற்பட்டிருக்கும் தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் தந்து உதவுங்கள். இந்தப் பகுதி என்னுடைய பேரரசின் கீழ் செயல்படும் குறுநில மன்னர்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவையானது கிடைக்கவும் நான் உதவுகிறேன்’ என்றான் துரியோதனன்.

அவன் மேல் இரக்கம் கொண்ட அந்தப் பெண், ஒரு குடுவையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். தண்ணீர் தாகத்தில் இருந்த துரியோதனன், அந்தக் குடுவையில் இருந்ததை முழுமையாகக் குடித்து முடித்தான். அவன் குடித்து முடித்த பின்புதான், அவனுக்குத் தான் குடித்தது தண்ணீர் இல்லை என்பதும், அது புளித்துப் போன நீராக இருப்பதும் தெரிந்தது.  

உடனே ‘அம்மா! தாங்கள் எனக்குக் கொடுத்த தண்ணீர் மிகவும் புளித்துப் போனது போன்ற வாசனையுடன் இருக்கிறதே! ஏன்?’ என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், ‘அரசே! தாகத்தால் மிகவும் களைத்துப் போய் வந்த தங்களுக்கு, முதலில் தண்ணீர் தரலாமென்றுதான் நினைத்தேன். அரசரான தங்களுக்குச் சாதாரணமான தண்ணீர் தருவது தவறு என்பதால், எங்கள் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுக்கும் கள் எனும் பானத்தைக் குடிக்கக் கொடுத்தேன்’ என்றாள்.

/>துரியோதனன், ‘இந்த பானம் புளித்துப் போயிருந்தாலும், அதைக் குடித்த எனக்கு புதுவிதமான மகிழ்ச்சி கிடைத்தது போலிருக்கிறது. உங்களுக்கு வேண்டியதை என்னிடம் கேளுங்கள்’ என்றான்.

அந்தப் பெண்ணோ ‘இங்கு இறைவன் வழிபாட்டுக்குத் தனியாக ஒரு கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டினாள்.

அதற்குச் சம்மதித்த துரியோதனன், அந்தப்பகுதி தலைவரிடம், அவர்கள் விரும்பும் கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்ததுடன், அந்தக் கோவில் கட்டுமானத்துக்கும், பயன்பாட்டுக்கும் தேவையான நிலங்களையும் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.  

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் வழிபாட்டிற்கு ஏற்றதாக ஒரு புதிய கோவிலைக் கட்டினர். அந்தக் கோவிலில் எந்தச் சிலையும் வைத்து வழிபட விரும்பாத அவர்கள், தங்களுக்கான கடவுளாகத் துரியோதனனையே நினைத்து வழிபட முடிவு செய்தனர் என்கிறது தல வரலாறு.

கோவில் அமைப்பு

‘மலநடா’ (மலா – மலை, நடா – கோவில்) எனும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவிலின் முகப்புப் பகுதியில், கேரளக் கட்டுமானப் பாணியில் அழகிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்குள், கருவறைப் பகுதி போல் சுற்றுச்சுவர்களுக்கான அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. நடுவில் சிலை அமைப்பதற்காக உயரமான மேடை மட்டும் உள்ளது. மேற்கூரை எதுவும் அமைக்கப்படவில்லை. இந்தப்பகுதியை அல்தரா அல்லது மண்டபம் என்று அழைக்கின்றனர்.

கோவிலில் நடைபெறும் முக்கியமான விழா நாட்களில், இந்தப் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் துரியோதனனையேத் தங்களது முதன்மைக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வழிபாட்டுப் பணிகள் அனைத்தையும், குரவா வகுப்பினர்தான் செய்கின்றனர். இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்வில் வளமான மாற்றம் அமையும் என்கிறார்கள்.  

மலக்குடா பெருவிழா


/>ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் நெல் அறுவடை செய்யும் முன்பாக இந்த ஆலயத்தில், ‘மலக்குடா மகோத்சவம்’ நடக் கிறது. இக்கோவிலின் ஊராளி எனப்படும் வழிபாட்டுப் பணி செய்பவர் பயன்படுத்தும் குடையைக் குறிப்பிடும் வகையில், இந்த விழாவை ‘மலக்குடா மகோத்சவம்’ என்கின்றனர். இந்த விழா தொடங்குவதற்கு முன்பாக கோவில் வழிபாட்டுப் பணியைச் செய்பவரும், அவருடைய பணிக்கு உதவியாக இருப்பவர்களும், இந்த ஆலயத்தின் துணைக்கோவில்களில் ஒன்றாக இருக்கும் குருக்கள்சேரி பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள அம்மனை விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்ளும் அம்மன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, மலநடா கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் மண்ட பத்தில் வந்து அமர்ந்து, திருவிழாவை காண்பதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்குகிறார்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குன்னத்தூர் வட்டம், பொருவழி எனும் கிராமத்தில், எடக்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த மலைக்கோவில். அடூரில் இருந்து வட கிழக்கிலும், சாஸ்தாம் கோட்டா என்னும் இடத்தில் இருந்து தென்கிழக்கிலும் இந்த ஆலயம் உள்ளது. கொல்லம் நகரிலிருந்து பரணிக்காவு வழியாக 35 கிலோமீட்டர் பயணம் செய்தும், கொட்டாரக்கராவில் இருந்து புத்தூர் அல்லது ஏனாது வழியாக 25 கிலோமீட்டர் பயணம் செய்தும் கோவிலை அடையலாம்.   

-தேனி மு.சுப்பிரமணி.

பள்ளிப்பனா

இந்தக் கோவிலுக்கு உரியதாகக் கருதப்படும் ஏழு பகுதியில், மறைந்திருக்கும் தீயசக்திகளை நீக்கி, அங்கு வாழும் மக்களுடைய வாழ்க்கையை வளமடையச் செய்யும் விழாவாக, ‘பள்ளிப்பனா’ என்ற விழா நடைபெறுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடத்தப்படுவதற்கு ஒரு கதை இருக்கிறது.

மகாவிஷ்ணு அசுர தோ‌ஷத்தால் பாதிக்கப்பட்டு, பல்வேறு தீய சக்திகளினால் துன்பப்பட்டு வந்தார். அந்த அசுர தோ‌ஷத்தை நீக்க, வேலன் வகுப்பினரால் மட்டுமே முடியும் என்று சுப்பிரமணிய சுவாமி மூலம் தெரிந்து கொண்ட அவர், மூன்று உலகிலும் வேலன் வகுப்பினரைத் தேடினார். அவருடைய தோ‌ஷத்தை நீக்கக் கூடிய வேலன் வகுப்பினர் எவரும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒருநாள், சிவபெருமான் வேலனாகவும், பார்வதி வேலத்தியாகவும், கணபதி மற்றும் சுப்பிரமணியர் பூத  கணங்களாகவும் அவர் முன்பாகத் தோன்றினர். அவர்கள் விஷ்ணுவின் அசுர தோ‌ஷத்தை நீக்குவதற்காகப் பல்வேறு அரிய செயலைச் செய்து முடித்தனர். இந்த நிகழ்வுதான் ‘முதல் பள்ளிப்பனா’ என்று கருதப்படுகிறது. இந்த விழாவில், இறைவனின் சக்தியை அதிகரிப்பதற்காக, 11 நாட்கள் 18 பெரும் செயல்கள் (மகாகர்மங்கள்) செய்யப்படுகின்றன.