சுகப்பிரசவம் அருளும் வில்லியனூர் ஆலயம்

சுயம்புவாகத் தோன்றிய திருமேனி - பிரம்மன் பூசித்த தலம் - சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம்.

Update: 2017-06-07 10:39 GMT
சுயம்புவாகத் தோன்றிய திருமேனி - பிரம்மன் பூசித்த தலம் - சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம் - சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம் - பங்குனியில் சூரியன் வழிபடும் தலம் - வில்லைப்புராணம் கொண்ட கோவில் - ஆண்டுதோறும் கவர்னரும் முதல்வரும் தேர் இழுக்கும் தலம்- பிரெஞ்சு ஆட்சியில் கண்காணிப்பு கோபுரமாக விளங்கிய ராஜகோபுரம் -புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில்.

புராணக் கதைகள்

ஒரு காலத்தில் வில்வமரக் காடாக விளங்கிய இத்தலத்தில் இறைவன் வெளிப்பட்டது ஒரு சுவையான கதை. உழவார் கரை பண்ணையார் வளர்த்த பசு ஒன்று சிவலிங்கம் மறைந்துள்ள புற்றின் மீது பால் சுரப்பதைக் கண்ட மக்கள், தங்கள் மன்னனிடம் கூற, மன்னனும் அங்கு வர, அங்கே மறைந் திருந்த சுயம்புலிங்கம் வெளிப்பட்டது. இம்மன்னன் இறைவனுக்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பினான் என தலபுராணம் கூறுகிறது.

இது போன்று மற்றொரு புராணக் கதையும் உண்டு. இச்செய்தி வீரராகவக்கவி இயற்றிய வில்லைப் புராணத்தில் காணப்படுகிறது. சோழவள நாட்டைச்சேர்ந்த கமலாபுரி என்ற நகரை தருமபாலன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் பலனாக அவன் உடல் முழுக்க வெண்குட்ட நோய் தாக்கியது. மனம் நொந்து இருந்த மன்னனிடம் புண்ணியகீர்த்தி என்ற அந்தணர் வந்தார். அவரின் ஆலோசனைப்படி தொண்டை வள நாட்டில் வில்வவனம் என்ற பெயரில் உள்ள பிரம்மனால் பூஜிக்கப்பட்ட திருக்காமீஸ்வரர் ஆலயம் சென்று பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபடச் சென்னார்.

அவ்வாறே மன்னன் தருமபாலனும் செய்ய, அவனது நோய் அனைத்தும் நீங்கியது. பிரம்மதேவன் உருவாக்கிய தீர்த்தம் இது. ஹிருத்தாபநாசினி, பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தில் மூழ்கி பலன் பெற்றவர்கள் ஆதிசேஷன், இந்திரன், மன்மதன், கோவிந்தினி எனும் அந்தணர், சகலாங்க சவுந்தரி என்ற கணிகை, சோழன் நரசிங்கமூர்த்தி என்று பட்டியல் நீள்கிறது.

வில்லைப் புராணம்

இக்கோவிலைப் பற்றி அறிய உதவும் தலபுராணம் வில்லைப்புராணம் ஆகும். 495 பாடல்களைக் கொண்ட இதனை இயற்றியவர் வீரராகவக்கவி என்ற புலவர். இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையே சாரும். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் பேராசிரியராக இருந்த ஜூலின் வின்சென்ட் என்பவர் பாரீஸ் நகர் தேசிய நூலகத்தில் இருந்த கையேட்டுப் பிரதியை நகல் எடுத்து சாமிநாத அய்யருக்கு அனுப்பி வைக்க, அது 1940-ம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்று, வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

பிரசவ நந்தி

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள சுகப்பிரசவ நந்தி (படம்) அம்மன் சன்னிதியை நோக்கியவாறு இது அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும் இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி திருப்பி வைத்துவிட வேண்டும். நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். இதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து அதற்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அம்மனை நோக்கிய வடக்கி திசையில் அந்த நந்தியை இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே நன்றிக்கடனும், பரிகாரமும் ஆகும்.

திருக்காமீஸ்வரர்- கோகிலாம்பிகை



இங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன். இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன் எனப் பல பெயர்கள் உள்ளன. இறைவிக்கு கோகிலாம்பிகை, குயிலம்மை, முத்தம்மை எனப் பல பெயர்கள் உள்ளன.

திருக்காமீசுவரம், வில்வவனம், வில்வநகர், வில்லேச்சுரம், வில்லியனூர் என இத்தலத்தின் பெயர்களும் பலவாகும். இங்குள்ள விநாயகர், வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார். முருகன் பெயர் முத்துக்குமரன் என்பதாகும்.

இவ்வாலயம் அரிய கலைநயம் கொண்ட சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. மகாமண்டபத்தின் ஒரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் காட்சி தத்ரூபமாக காட்சியளிக்கிறது. குழந்தை வெளியே வருவது, இரண்டு பெண்கள் தாங்கிப் பிடிப்பது என உயிரோட்டமாக வடிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் கண்டாமணி, கி.பி. 1812-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள புரோக்ஸ் போர்னிபரி என்ற ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டது.

இங்குள்ள திருத்தேர் மிகவும் பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இத்தேரின் பழைய அச்சு நீக்கப்பட்டு, இரும்பாலான புதிய அச்சு பொருத்தப்பட்டது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை கவர்னரும் முதல்வரும் வடம் பிடித்துத் தொடங்கி வைப்பது, பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதல் இன்றும் தொடர்கிறது. இத்திருக்கோவிலுக்கு மூன்று தேர்கள் உள்ளன. தேரோட்டத்தில் இம்மூன்றும் உலா வரும்.

இங்கே சூரிய பூஜை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. பங்குனி மாதத்தில் 9,10,11 ஆகிய மூன்று தினங்களில் இப்பகுதி வாழ் மக்கள் பலரும் அறிந்திராத செய்தி.

விழாக்கள்

இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி, வைகாசி விசாக பிரம்மோற்சவம், 9-ம் நாள் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அம்பிகைக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, சங்கரபாணி நதியில் மாசி மக தீர்த்தவாரி, பங்குனியில் சூரிய பூஜை, பிரதோஷம் என இங்கே அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடந்து வருகிறது.

ஆலய தீர்த்தம் ஹிருத்தாபநாசினி. தலவிருட்சம், வில்வமரம்.

இந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வில்லியனூர் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வில்லியனூர் திருக்காமீசுவரன் கோவில்.

-பனையபுரம் அதியமான் 

மேலும் செய்திகள்