14. பாபா கினாராமின் அற்புதங்கள்

பொங்கிய கங்கை, பாபா கினாராமின் கால்களைத் தொட்டுக் கழுவி அமைதியடைந்து திரும்பியதைக் கண்டு, மெய்சிலிர்த்துப் போனார் பாபா சிவதாஸ்.

Update: 2017-06-07 11:18 GMT
பொங்கிய கங்கை, பாபா கினாராமின் கால்களைத் தொட்டுக் கழுவி அமைதியடைந்து திரும்பியதைக் கண்டு, மெய்சிலிர்த்துப் போனார் பாபா சிவதாஸ். அந்த இளைஞன் போக வேண்டிய பாதை நீண்டு இருப்பதையும், அதில் நிறைய சாதிக்க வேண்டிருப்பதையும் உள்மனதில் உணர்ந்து, கினாராமைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டார். ராமானுஜர் வழி வைணவரான பாபா சிவதாஸ், பாபா கினாராமுக்கு வைஷ்ணவ முறைப்படி தீட்சை தந்தார். அவருக்கு ராம நாம மந்திரமும் உபதேசித்தார். சிவனைத் தன் கடவுளாக வரித்துக் கொண்டிருந்த அகோரிகளின் முதல் குருவான பாபா கினாராமுக்கு, தமிழ் வைணவாச்சாரியர் வழி வந்த ஒரு குருவிடம் வைணவ தீட்சை கிடைத்தது ஆச்சரியமே. (பிற்காலத்தில் பாபா கினாராம் இயற்றிய ‘விவேக்சார்’ என்ற அகோரிகளின் புனித நூலின் தொடக்கத்திலேயே இந்த வைணவ குருவையும், ராமநாமத்தையும் போற்றியிருக்கிறார்).

கங்கைப் பகுதியில் இருந்தும் பாபா கினாராமின் யாத்திரை தொடர்ந்தது. அந்த யாத்திரையோடு, அவரது அற்புதங்களும் தொடர்ந்தன. அற்புதங்களின் ஆரம்பமாக அவர் அகோரிகளின் குலமாதாவாகக் கருதப்படும் ‘ஹிங்க்லாஜ் மாதா’வின் அருளை பலுசிஸ்தானத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பெற்றார் என்று சொல்லப்படுகிறது. ஹிங்க்லாஜ் மாதா அவரை, வாரணாசியில் க்ரிம் குண்டத்தில் ஒரு ஆசிரமம் அமைக்கும்படி சொன்னதாகவும், அங்கு தன் பரிபூரண அருள் கிடைக்கும் என்று ஆசி வழங்கியதாகவும் சொல்கிறார்கள். அதன் பின்னரே பாபா கினாராம் அற்புதங்கள் ஆரம்பமாயின.

வழி நெடுக பல இடங்களில் துன்பத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட மக்களுக்கு அவர் உதவினார். இந்த சம்பவங்கள் பாபா கினாராமின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்களில் சொல்லப்படுகின்றன. வரி செலுத்த முடியாததால் ஒரு கிராமத்தில், இளைஞன் ஒருவனை அப்பகுதி ஜமீன்தார் அடிமைப்படுத்தி சித்திரவதை செய்து வந்தார். அந்த இளைஞனின் வயோதிகத் தாய், ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்ததைக் கண்டார் பாபா கினாராம். அந்த வயோதிகத் தாயின் அழுகைக்கான காரணத்தை அறிந்தவர், ஜமீன்தாரிடம் சென்று அந்த இளைஞனை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஜமீன்தாரோ, தனக்கு வர வேண்டிய வரி கிடைக்காமல் இளைஞனை விடுவிக்க முடியாதென்று கறாராகச் சொல்லி விட்டார்.

உடனே பாபா கினாராம், ‘நீ நின்றிருக்கிற காலடி மண்ணிலேயே உனக்கு வர வேண்டிய வரிப்பணம் இருக்கிறது, எடுத்துக் கொள்’ என்றார்.

ஜமீன்தார் தன் காலடியில் இருந்த நிலத்தைத் தோண்டிப்பார்த்த போது, அதில் அந்த இளைஞன் கட்ட வேண்டிய வரிப்பணம் சரியாக கிடைத்தது. பாபா கினாராமின் காலில் விழுந்து வணங்கிய ஜமீன்தார், இளைஞனை விடுவித்தார். அந்த இளைஞன் ‘பிஜாராம்’ என்ற பெயரில் பாபா கினாராமின் சீடனாக அவரைத் தொடர்ந்தான்.

ஜுனாகத் பகுதியின் அரசன், பிச்சை எடுத்துத் திரியும் பக்கிரிகள், சாதுக்கள் ஆகியோரைச் சிறைப்படுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் சிறையில், தானியங் களைப் பெரிய கற்களால் ஓய்வில்லாமல் அரைக்க வேண்டியிருந்தது. அந்தப் பகுதிக்கு வந்த போது இதை அறிந்த பாபா கினாராம், அந்தக் கல்களைத் தானாக ஆட்ட வைத்தார். சிறை அதிகாரிகள் மூலம் இந்தத் தகவல் அறிந்த அரசன், உடனே அவர்களை விடுவித்து, காரணம் யாரென்று அறிந்து ஓடோடி வந்து பாபா கினாராமிடம் மன்னிப்பு கேட்டான்.

சூரத் பகுதியில் விதவைப் பெண் ஒருத்தி, குழந்தை பெற்றுக் கொண்டதால், அவளையும், அவள் குழந்தையையும் கடலில் தூக்கியெறிய ஊரார் உத்தரவிடப்பட்டனர். அப்போது அந்தப் பெண்ணையும், அவளது குழந்தையையும் பாபா கினாராம் காப்பாற்றிய செய்தியும் சொல்லப்படுகிறது. இப்படி அவர் புரிந்த அற்புதங்கள் பெரும்பாலும் அனைவராலும் கைவிடப்பட்ட, பாவப்பட்ட மக்களுக்கானதாகவே இருந்தன.

குஜராத்தில் கிர்னார் மலைப்பகுதியில் பயணிக்கும் போது தான் பாபா கினாராம், அகோரிகளின் ஜகத்குருவாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும் கருதப்படும் தத்தாத்ரேயரைக் கண்டதாகச் சொல்கிறார்கள். மிகவும் பயங்கரமான கோரத் தோற்றத்தில் ஒரு சவத்தின் மேல் அமர்ந்திருந்த தத்தாத்ரேயர், கையில் மாமிசத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாபா கினாராமைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் பயத்திலும், அருவருப்பிலும் மூழ்கிப்போயிருப்பார்கள். ஆனால் பாபா கினாராம், தத்தாத்ரேயரின் நிலை கண்டு நடுங்கி விடவில்லை. காந்தமாகக் கவரப்பட்டு நின்ற பாபா கினாராமிடம், தத்தாத்ரேயர் தன் உடம்பில் இருந்தே மாமிசத்தை வெட்டி எடுத்து சாப்பிடச் சொல்லி நீட்டினார். அருவருப்பு அடையாமல் அந்த மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்ட பாபா கினாராம், அந்தக் கணமே அண்டசராசரம் அனைத்திலும் நடக்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் காண முடிந்த தெய்வீக நிலையை அடைந்து விட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன.

அவரைச் சோதிக்க வேண்டி தத்தாத்ரேயர் ‘டெல்லி சக்கரவர்த்தி’ என்று சொல்லி இருக்கிறார். அப்போதே டெல்லி சக்கரவர்த்தியை மனக்கண்ணில் காண முடிந்த பாபா கினாராம் ‘கருப்புக் குதிரையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வெள்ளை சால்வை கீழே விழுந்து கொண்டிருக்கிறது’ என்று முடித்திருக்கிறார். அவர் சொன்னது போலவே டெல்லி அரண்மனையில் நடந்திருக்கிறது.

அகோரிகளின் ஜகத்குருவான தத்தாத்ரேயர், பாபா கினா ராமுக்கு மேலும் பல மெய்ஞான ரகசியங்களைப் போதித்து அகோரிகளின் பூவுலக குருவாக உயர்த்தி விட்டுப் போனதாகச் சொல்கிறார்கள். முக்கியமான பொறுப்பைச் சீடனிடம் ஒப்படைத்த குரு, சீடனின் தகுதியை சில சமயங்களில் சோதித்துப் பார்ப்பதுமுண்டு அல்லவா?

அப்படி ஒரு நிகழ்வு தத்தாத்ரேயருக்கும், பாபா கினாராமுக்கும் இடையே, சில காலம் கழித்து, வாரணாசியில் ‘ஹரிச்சந்திர காட்’டில் நடந்தது. அப்போது தத்தாத்ரேயர், பாபா காலுராம் என்ற அகோர குருவாக காட்சி அளித்திருக்கிறார்.

பாபா காலுராம் மயானத்தில் மண்டை ஓடுகளுக்குத் தீனியாக கொண்டைக்கடலைகளை வீசிக் கொண்டிருக்கையில், பாபா கினாராம் அங்கு சென்றிருக்கிறார். குருவைக் கண்டதுமே அவர் மீண்டும் தன்னைப் பரிட்சிக்கவே அங்கே வந்திருக்கிறார் என்பதை பாபா கினாராம் புரிந்து கொண்டார். உடனே அவர் விளையாட்டாக ‘ஸ்தம்பன் க்ரியா’ என்ற சக்தியைப் பயன்படுத்தி, மண்டை ஓடுகளின் அசைவுகளை அப்படியே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார். பாபா காலுராம் அந்த மண்டை ஓடுகளை அழைத்த போதும், அவை சலனமில்லாமல் அப்படியே கிடந்திருக்கின்றன.

அடுத்தபடியாக பாபா காலுராம் கங்கையில் ஒரு பிணம் மிதந்து வருவதை, பாபா கினாராமுக்கு விரலால் சுட்டிக் காட்டியிருக்கிறார். உடனே பாபா கினாராம், ‘மகராஜ் அது பிணமல்ல’ என்று சொல்லியிருக்கிறார்.

‘அது பிணமாக இல்லாவிட்டால், அதை எழுந்து வரச்செய் பார்க்கலாம்’ என்று பாபா காலுராம் சொல்ல, பாபா கினாராம் தயக்கமே இல்லாமல் அந்தப் பிணத்துக்கு எழுந்து வரக் கட்டளையிட்டிருக்கிறார். அந்தப் பிணமும் உயிர்பெற்று கங்கையிலிருந்து எழுந்து அவர்கள் அருகே வந்து வணங்கி நின்றது.

இப்படி இயங்கிக் கொண்டிருந்த மண்டையோடுகளை இயங்காமல் ஸ்தம்பிக்க வைத்தும், இறந்து போயிருந்த உடலை உயிர்ப்பிக்க வைத்தும், தன் குருவை பாபா கினாராம் திருப்திப்படுத்தினார். பாபா காலுராம் தன் சீடனை மெச்சி காசியில் இருந்த க்ரிம் குண்டத்திற்கு அழைத்துச் சென்று, எல்லா ஞானங்களுக்கும் சிகரமான அகோர மந்திர ஞான தீட்சை அளித்தார். முன்பே ஹிங்க்லாஜ் மாதாவும் அங்கே ஆசிரமம் அமைக்கும்படியும், அங்கே அருள்பாலிப்பதாகவும் கூறி இருந்ததால், அன்றிலிருந்து அந்த இடத்தையே பாபா கினாராம் தன் நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்டார்.

அந்த இடமே இன்றும் அகோரிகளின் புனிதத்தலமாக இருக் கிறது. அந்த க்ரிம் குண்டம் பகுதியின் சக்தி பற்றி பலரும் உயர்வாகச் சொல்கிறார்கள். உயிர்க்கொல்லி நோய் முற்றிய நிலையில் இருந்த குழந்தை ஒன்றை எடுத்துக் கொண்டு, அதன் தாய் பெருந்துக்கத்துடன் பாபா கினாராமிடம் வந்தார். அங்கிருந்த குளத்தில் குழந்தையைக் குளிப்பாட்டும்படி பாபா கினாராம் கூறியிருக்கிறார். அந்தத் தாயும் தன் குழந்தையை அந்தக் குளத்தில் குளிப்பாட்டி இருக்கிறார். குளிப்பாட்டி விட்டுக் கரை ஏறிய போது, அந்தக் குழந்தை முழுவதுமாய் குணமாகி இருந்தது.

170 ஆண்டுகள் வாழ்ந்த பாபா கினாராம், தான் இறப்பதற்கு முன் ‘விவேக்சார்’, ‘ராம்கீதா’, ‘ராம்ரசால்’, ‘உன்முனிராம்’ என்ற நான்கு நூல்களை இயற்றினார். அந்த நான்கு நூல்களில், ‘விவேக்சார்’ அகோரிகளின் தலையாய புனித நூலாகக் கருதப்படுகிறது. அகோரிகளின் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தியும், சீர்திருத்தியும் தெளிவான வழிகாட்டுதலைத் தந்த பெருமை பாபா கினாராமையேச் சேரும்.

அவருடைய சமாதி வாரணாசியில் ‘பாபா கினாராம் ஸ்தல்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் அகோரிகளின் குலமாதாவான ஹிங்க்லாஜ் மாதாவின் சக்தி எந்திரம் ஒன்றை ஸ்தாபிதம் செய்து விட்டே பாபா கினாராம் சமாதி அடைந்தார். எனவே அங்கு செல்பவர்கள் உயர்ந்த தெய்வீக சக்தியை உணர முடிகிறது என்கிறார்கள்.

-அமானுஷ்யம் தொடரும். 

மேலும் செய்திகள்