திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் தேரோட்டம்

திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இளங்கோவடிகள் போன்ற தமிழ்ச் சான்றோர்களால் பாடப் பெற்ற திருத்தலமாக

Update: 2017-06-08 22:02 GMT
எலச்சிபாளையம்,

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தனாரீஸ்வரர் சாமி, உமையொரு பாகனாக அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2-ந் தேதி தமது பரிவாரங்களுடன் அர்த்தனாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் சாமிகள் மலைக்கோவிலில் இருந்து, நகருக்கு எழுந்தருளினர். விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள், சாமி திருவீதி உலா நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அர்த்தனாரீஸ்வரர் சாமி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கோவில் செயல் அலுவலர் ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து சிவ, சிவ, ஓம் நமச்சிவாய என்று பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

நாளை நிலைக்கு வரும்

நிலையில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு ரதவீதி பழக்கடை பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டது. தேரோட்ட விழாவில், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) 2-வது நாள் தேரோட்டமாக பூக்கடை பகுதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு ரதவீதியில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகே வரை இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படும். நாளை(சனிக்கிழமை) பழைய பஸ் நிலையம் முகப்பில் இருந்து புறப்பட்டு தேர் அன்று மாலை நிலைக்கு வந்து சேரும்.

மேலும் செய்திகள்