ஆன்மிகம்
சடைமுடி தரித்த சிவசைலநாதர்

சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்கு கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று. 

நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 15–வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.

கடனையாறு என்று அழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கோவில்.

இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேசுவர். இந்த நந்திகேசுவரர், இந்திர சபையின் தலைமை சிற்பி, மயனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இத்தலத்தில், கொலுவீற்றிருக்கும் பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்அருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். 

லிங்கம் உருவான கதை

திருமறை காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் நடந்த திருக்கல்யாண வைபவத்தை பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூவுலகத்தை தாங்கும் பூமித்தாய் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தாள். அதனால் உலகத்தை சமன் செய்வதற்காக இந்த உலகத்தை இயங்க செய்யும் காரணகர்த்தா, அகத்தியர் மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை தெற்கே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்ரி முனிவர், சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார். 

அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்கு தொடர்ச்சி மலையில் திரிகூடபர்வதம்(மூன்று மலைகள் சேருமிடம்) சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அத்ரி முனிவர் தன் துணைவியார் அனுசுயாதேவி மற்றும் சீடர்கள் கோரட்சகர், தத்தாத்ரேயர் முதலானோரோடு திரிகூடபர்வதம் வந்து தவம் செய்ய தொடங்கினார். 

ஒருமுறை பவுர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்கு கடம்ப மலர்களை பறிப்பதற்காக கடம்பவனம் சென்றனர் அத்ரி முனிவரின் சீடர்கள். அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொறிந்து செல்வதை கண்ட சீடர்கள், அப்பாறையின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சிறிய சுயம்புலிங்கத்தை அவர்கள் பார்த்து உவகையுடன் அத்ரி முனிவரிடம் தாங்கள் கண்டதை தெரிவித்தனர். இதனையடுத்து அத்ரி முனிவர், தனது துணைவியாருடன் வந்து சுயம்புலிங்கத்தை கண்டு ஆனந்த களிப்பில் தாம் கண்டதை வேதமந்திரமாக சொல்கிறார்.

‘அத்ரினாம் பூஜிதம ஸ்தம்பம் பக்தாபீஷ்ட பிரதாயகம்
வந்கேதம் சிவசைலேசம் பிண்டிகாம் ஷோடசானுதம்
சதுர்புஜாம் விசாலாட்சிம் தேவீம் பசுபதீம் முகீம்
பாசாங்குச வல்லபாம் அம்பாம் தீரைலோகிய நாயகீம்
தேவீம் பரமகல்யாணிம்‘’

“அத்ரியாகிய நானே தவத்தின் பயனாய் சுயம்புலிங்க தரிசனம் செய்ய நினைத்தேன். ஆனால் முக்திக்கு பக்திதான் அவசியம் என்று நிரூபிக்க பக்தர்களுக்கு காட்சியளித்த இறையே, பூமிக்கு மேலே ஒரு பாகமும் (சுமார் 3 அடி), கீழே 15 பாகமும் (சுமார் 45 அடி) கொண்டு சிவம் சைலத்தில் தோன்றியதால் சிவசைல நாதர் என்று அழைக்கப்பெறும் பெருமானே, நான்கு கைகளுடன் பரமகல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்கும் அன்னையை இங்கு காணும் பாக்கியத்தை தந்தருள்வீராக” என்பதே இப்பாடலின், இந்த தேவமந்திரத்தின் பொருளாகும்.

இதன் மூலம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்கு கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை அறிய முடிகிறது. 

இறைவன் சடை முடிந்த வரலாறு

இறைத்தொண்டில் தன்னை இணைத்துக்கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான். கோவிலுக்கு வரும் வழியில் கருணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மன்னனால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான். வேண்டு பவருக்கு வேடிக்கை காட்டுவதை வாடிக்கையாக கொண்ட அப்பன், வேந்தனிடத்தும் விளையாட நினைத்தார். 

வெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் கோவிலுக்குள் நுழைந்தபோது பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. சாத்திய நடை திறப்பதற்கில்லை. மன்னனின் திடீர் வருகையால் அர்ச்சகர் கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக கொடுத்து அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை திரும்ப பெற்று மன்னனுக்கு பிரசாதமாக கொடுத்தார்.

சிவதரிசனம் செய்ய முடியாவிட்டாலும் அவருக்கு சூட்டிய புஷ்பத்தையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணி மனம் மகிழ்ந்த மன்னன் அம்மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டபோது மலரில் ஒரு உரோமம்(முடி) தட்டுப்பட்டது. அது அபசகுணம் என்று கருதிய மன்னன், அர்ச்சகரிடம் பிரசாதத்தில் முடி எப்படி வந்தது? என்று கேட்டான். அதற்கு அர்ச்சகர், சுவாமியிடம் சடைமுடியுண்டு. மாலையில் இருந்தது சுவாமியின் முடியே என்று கூறினார். அப்படியானால் அந்த சடைமுடியை நான் தரிசிக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என்று அர்ச்சகருக்கு கட்டளையிட்டான் மன்னன்.

அப்போது செய்வதறியாது திகைத்த அர்ச்சகர், இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்து தன்னை காப்பாற்றுமாறும், இல்லையேல் உயிர் நீக்கப்போவதாகவும் முறையிட சிவசைலநாதர் அசரீரியாக ‘‘சுதர்சனப்பாண்டியனை சோதிக்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும், அவனுக்கு தரிசனம் தந்து உன்னை காப்பேன் என்றும், எனது மூன்று புறங்களிலும் துளைகள் அமைப்பாயாக” என்றும் கூறினார்.

சில நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்தான் மன்னன். அப்போது மன்னனை கூட்டிச்சென்ற அர்ச்சகர், சுவாமிக்கு பின்னால் உள்ள துளைக்கு நேராக வந்து நிற்கும்படி வேண்டினார். அதன் படியே மன்னன், சுவாமியின் பின்புறம் உள்ள துளைப்பக்கமாக வந்து நிற்க அர்ச்சகர் கர்ப்பக்கிரகத்தினுள் இருந்து கற்பூர தீபம் காட்ட அந்த தீப ஒளியில் துளையின் பின்னால் இருந்த பாண்டிய மன்னன் இறைவனை ஜடாதளியாக... தரிசனம் செய்த திகைப்பில் ஆழ்ந்து இறைவா அர்ச்சகர் கூறியது பொய் என்றே கருதினேன். என்னை மன்னித்தருள்க என்று இறைவனிடம் மனமுருக வேண்டிக்கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

கோவில் உருவான வரலாறு

முன்னாளில் செந்தமிழ் பாண்டிய நாட்டினை மணலூரை தலைநகராக கொண்டு சைவநெறி போற்றி சிறப்பாக ஆண்டு வந்தார் சுதர்சனப்பாண்டியன். இந்த மன்னன் பிள்ளை பேறு இல்லாமல் பெரிதும் வருந்தினான். பிள்ளை பேற்றினை பெறுவதற்காக இம்மன்னன் பொருநையின் கரையில் அசுவமேத யாகம் ஒன்றை செய்தான். யாகத்தின் முடிவில் எத்திசையும் சென்று வரத்தக்க படையுடன் அரச பரியினை (குதிரை) அலங்கரித்து அதனுடன் தனது சகோதரன் சத்யமூர்த்தியையும் அனுப்பி வைத்தான். கிழக்கு திசையிலும், தென் திசையிலும் வெற்றி பயணம் முடிந்தபின் பரி மேற்கு திசையில் பயணத்தை தொடங்கியபோது சிவசைலநாதர் கந்தவேளிடம் ‘எண்திசை வென்று இத்திசை நோக்கி வரும் பரியினை கட்டுவாயாக’ என்று பணிந்தார்.

மறைச்சிறுவனாக சென்ற குமரக்கடவுள், அக்குதிரையை பிணித்தான். அதனால் எழுந்த போரில் சத்தியமூர்த்தி மண்ணில் வீழ்ந்திட மணலூருக்கு செய்தி பறந்தது. சுதர்சனப்பாண்டியன் மதகரியென களத்தில் புகுந்து மறைச்சிறுவனுடன் போர் புரிந்து முடிவில் மகுடம் கீழே விழ மண்ணில் மன்னன் வீழ்ந்த தருணத்தில், முருகன் வேலுடன் தோன்றி சிவசைலநாதர் சுயம்புமூர்த்தியாக இருக்கும் இடத்தை கூறி மறைந்தார். நான் என்ற அகப்பற்றும், நான் நடத்தும் வேள்விப்பரி இது என்ற புறப்பற்றும் அக்கணமே நீங்கப்பெற்ற சுதர் சனப்பாண்டியன், சுயம்பு மூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தான். இறைவன் அருளால் போர்க்களத்தில் மாண்டோர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர்.

பாண்டிய மன்னனின் பரிவேள்வி முழுமையடைந்தது. இறையருளால் கந்தவேளும், சுதர்சனப்பாண்டிய மன்னனின் மகவாக தோன்றினான். அம்மகவிற்கு குமரபாண்டியன் என பெயர் சூட்டி பெருமிதமடைந்த மன்னன் தனக்கு அருள்பாலித்த சிவசைலநாதருக்கு கோவில் எழுப்பினான்.