ஆன்மிகம்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள்.
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம், குபேரயாகம், அஷ்டலட்சுமி யாகம், தனகார்சன, அதிருத்ர யாகம் உள்பட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், 1008 அர்ச்சனையும், 28 ஆகம பூஜைகளும் நடைபெற்றன. அதன்பின் வேத பாராயணம், சிறப்பு உபசார பூஜைகள், மங்கள ஆர்த்தி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மகா தீபாராதனை நடைபெற்றது.

பூசணியில் விளக்கேற்றி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவில் வளாகத்தில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள். பின்னர் கோவிலை வலம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை தரிசித்தனர்.

விழாவையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் குருதி யாகம் நடைபெற்றது. 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு மற்றும் யாகசாலை பொருட்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரவணன், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.