ஆன்மிகம்
17. பாறையில் கட்டிய வீடு

இயேசு பிரான் இம்மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில், தம் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறினார்.
நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்

இயேசு பிரான் இம்மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில், தம் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறினார்:

‘‘என்னைப் பார்த்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று சொல்பவர்கள் எல்லாம், விண்ணரசுக்குள் செல்வது கிடையாது. வானுலகில் உள்ள, என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுகின்றவர்களே விண்ணரசுக்குள் செல்வர்’’.

‘‘அந்நாளில் பலர் என்னைப் பார்த்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ உம் பெயரால் நாங்கள், இறைவாக்கைச் சொல்லவில்லையா? உம்முடைய பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம்முடைய பெயரால் வல்லமையான செயல்களைச் செய்யவில்லையா? என்று கேட்பர்’’.

‘‘அப்பொழுது நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி தவறிச்செயல்படுவோர்களே, என்னை விட்டுத் தள்ளிப் போங்கள்’ என்று வெளிப்படையாகவே அறிவித்து விடுவேன்’’.

‘‘ஆகவே, நான் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளைச் செவிமடுத்து, இவற்றின்படி செயல்படுகின்றவர் யாராக இருந்தாலும், பாறையின் மீது தம்முடைய வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாக இருப்பார்கள். மழை நன்றாகப் பொழிந்தது. ஆறானது; பெருகி ஓடியது. பெருங்காற்று வீசியது. அவை அனைத்தும் அவ்வீட்டின் மீது மோதியும் அது விழவில்லை. ஏனென்றால், அந்த வீட்டின் அடித்தளம் பாறையின் மீது அமைந்திருந்தது’’.

‘‘நான் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவற்றவர்களுக்குச் சமமாவர். மழை நன்றாகப் பெய்தது. ஆறு பெருக்கெடுத்து ஓடியது. பெரிய காற்று வீசியது. அவ்வீடு விழுந்தது. இப்படியாகப் பேரிழப்பு ஏற்பட்டது’’.

இவ்வாறு அவர் பேசி முடித்த சமயம், அவரது பேச்சைக் கேட்ட மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனென்றால், அவர்  மறைநூல் அறிஞர்கள் பேசியதைப் போலப் பேசாமல், அதிகாரத்தோடு அவர்களுக்குப் போதித்தார்.

இயேசு பெருமான் போதித்த இந்நற்செய்தியை மீண்டும் கவனமாகப் படியுங்கள். பெயருக்கு என்னைப் பார்த்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே,’ என்று சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. விண்ணுலகில் வீற்றிருக்கும் என் தந்தையின் விருப்பப்படி செயல்பட வேண்டும். அவர்கள்தான் விண்ணரசைத் தரிசிக்கவும் முடியும். அங்கு சேரவும் முடியும் என்கிறார்.

என் பெயரால் இறைவாக்கைச் சொல்வதும், என் பெயரால் பேய்களை ஓட்டுவதும், என் பெயரால் வல்லமையான  செயல்       களைச் செய்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. என்  தந்தையின் சித்தப்படி நடப்பதே ஏற்றுக் கொள்ளக்கூடியது என்று விரித்துக் கூறுகிறார்.

நான் சொல்லும் வார்த்தைகளைச் செவியில் தாங்கி, செயல்படுகின்றவர்கள், பாறையின் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவர் என்று கூறுகிறார்.

பாறையின் மீது எழுப்பப்படும் கட்டிடமோ, வீடோ எந்தவித இயற்கை சீற்றத்துக்கும் அவ்வளவு எளிதாகப் பாழாகி விடாது. காரணம் அது பாறையின் மேல் எழுப்பப்பட்டுள்ள கட்டிடம் ஆகும். பாறையின் மீது அடித்தளம் அமைந்துள்ளதால் அது தாங்குகிறது. மழை தொடர்ந்து பெய்தாலும், மழையின் காரணமாக ஆற்றிலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், இவற்றைத் தொடர்ந்து பெரிய காற்று, திசை மாறி அடித்தாலும் வீட்டிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

தான் சொல்லக்கூடிய வார்த்தைகளைக் கேட்டு விட்டு, இவற்றின்படி செயல்படாதவர்கள், மணலின் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவற்றவர்களுக்குச் சமமாவர் என்கிறார். காரணம், மணலின் மீது கட்டப்பட்ட வீட்டிற்கு அஸ்திவாரம் பலமாக இருக்காது. மழைக்கும், அதனால் ஏற்படும் வெள்ளத்துக்கும், பெருங்காற்றிற்கும் தாங்காமல் விழுந்து விடும்; பேரழிவு ஏற்படும் என்கிறார்.

எவ்வளவு அருமையான உவமையை எடுத்தாள்கிறார் என்பதை ஒருகணம் சிந்திப்போம். பாறை மேல் கட்டப்பட்ட வீடு;  மணலின் மீது கட்டப்பட்ட வீடு. இரண்டு வீட்டிற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பாருங்கள்.  

மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்த, அவர்களுக்கு நற்செய்தியைப் போதித்து, அவர்களை விண்ணரசில் தன் தந்தையோடு வீற்றிருக்கச் செய்யவே, அவர் இவ்வுலகிற்கு வந்தார். இவ்வுலகில் வாழ்வோரின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் கவனிக்கிறார். எளிமையாக விண்ணரசை அடைந்து விடலாம் என்று எண்ணுவோரைச் சிந்திக்க வைக்கிறார். ‘என் தந்தையின் திருவுளப்படி’ என்ற ஒரு வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். தந்தையின் திருவுளப்படி நடந்தால்தான், விண்ணரசை அடைய முடியும் என்று அதிகாரமாகப் பேசுகிறார்.

அவரின் பேச்சு அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை உயர்த்திக் கொள்ளாமல், தன் தந்தையைப் பற்றிப் பேசுகிறாரே என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள். இவ்வுலகில், இக்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களைக் கவனியுங்கள். நிரந்தரமில்லாத இவ்வுலகில் வாழும் இவர்களுக்கு, மனதில் ஏற்படும் அதிகார மமதையை எண்ணிப் பாருங்கள்.

இயேசு பெருமான் இப்படிப்பட்டவர்களை எல்லாம் மனதில் வைத்துதான், இவ்விதம் பேசுகிறார். மறைநூல் அறிஞர்கள் பேசுவது வேறு. அவர்களைப் போல அவர் பேசவில்லை. எதையும் எதிர்பார்த்தும் பேசவில்லை.

இயேசு பெருமான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், வெளிப்படையாகவே பேசுகிறார். நெறி தவறிச்  செயல்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும் என்னை விட்டுச் சென்று விடுங்கள். அப்படிப்பட்டவர்களை நான் என் தந்தையின் முன்னால், உங்களை எனக்குத் தெரியாது என்று அறிவித்து விடுவேன் என்கிறார்.

என் வார்த்தைகளைக் கேளுங்கள். கேட்டால் மட்டும் போதாது. கேட்டபடி நடங்கள். கேட்பதும் நடப்பதும் உண்மையாக  இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இயேசு பெருமானின் நற்செய்திகள் உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது என்பதை அனைவரும் உணர வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத இவ்வாசகங்கள் எல்ல வகையான மனிதர்களுக்கும் சாதி சமய வேறுபாடு இன்றி சொல்லப்பட்டது. அன்பைப் போதிக்கும்போது இது ஒரு சாராருக்கு மட்டும் உரியது என்று எண்ணி ஒதுக்க வேண்டியதில்லை.

நற்செய்தி என்றாலே, நம் எண்ணங்களோடு, ஒத்துழைக்கக் கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்படும் ஐவகை பொறிகளின் வழியாக உட்புகுந்து மனித மனங்களை ஆளுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு பிரானின் நற்செய்தியை செவிமடுப்போம். வாழ்க்கையில் நடந்து காட்டுவோம்.

(தொடரும்)