தோ‌ஷம் போக்கும் கரிவரதராஜ பெருமாள்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது.

Update: 2017-06-20 01:30 GMT
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

ஆலய தரிசனம்

இந்த திருக்கோவிலை அடைந்ததும் நம்மை ஆலய கோபுரம் வரவேற்கிறது. கோபுர தரிசனம் முடித்து கோவிலுக்குள் செல்கிறோம். கருவறையில் காட்சி தரும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாளை இங்கிருந்தே தரிசிக்கலாம். கோவில் முன் மண்டபத்தில் தென்புறத்தில் சக்கரத்தாழ்வாரும்,    வலதுபுறத்தில் தன்வந்திரி பகவானும் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். அவர்களை தரிசித்து விட்டு அர்த்த மண்டபத்திற்குள் நுழைகிறோம். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் அருகே துவாரபாலகர்களான ஜெயன் தென்புறமும், வடபுறம் விஜயனும் எழுந்தருளி உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே செல்கிறோம்.

நின்ற கோலத்தில் பெருமாள்

அங்கே.. அலங்கார பிரியரான எம்பெருமாள் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி உடன் கேசவபெருமாளாக எழுந்தருளி உள்ளார். அவரது திவ்ய தரிசனத்தை பெற்று கொண்டு கருவறையில் காட்சி தரும் மூலவர் கரிவரதராஜபெருமாளை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். சங்கு, சக்கரம், அபய கஸ்தம், சுதையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமானுடன் பக்தர்களுக்கு சேவை சாத்தி அருளுகின்றார்கள். இங்கு பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த அர்த்த மண்டபத்திலேயே ஸ்ரீசீதாராம, லட்சுமண, அனுமன் ஆகியோர் தனி சன்னிதியில் எழுந்தருளி தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர். பின்னர் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வருகிறோம். அர்த்த மண்டபத்தை ஓட்டி யோகநரசிம்மர் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

வலப்புறத்தில் ஆண்டாள்

பின்னர் கோவில் பிரகாரத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் சன்னிதியை தரிசித்தபடியே காட்சி தரும் 11 ஆழ்வார்களையும், ராமானுஜர், வேதாந்ததேசிகர், மணவாள முனிவர் ஆகியோரையும் தரிசிக்கலாம். மூலவர் சன்னிதிக்கு வலப்புறம், பிரகாரத்தில் தனி சன்னிதியாக ஆண்டாள் தாயார் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக பெருமாள் திருத்தலங்களில் இடதுப்புறம் தான் ஆண்டாள் தாயார் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்த திருத்தலத்தில் பெருமாளுக்கு வலதுப்புறமாக ஆண்டாள் தாயார் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தான் பெருமாளுக்கு வலப்புறம் தாயார் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இதே போன்று கீழ்திருப்பதி என்று அழைக்கப்படும் கோவிந்தராஜபெருமாள் கோவிலிலும் ஆண்டாள் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு பின்புறம் அமைக்கப்பட்டு உள்ள துளசி மாடத்தை வலம் வந்து வணங்கி விட்டு பிரகாரத்தின் மேற்கு புறம் நின்று கருவறையின் விமான கோபுரத்தை தரிசிக்கலாம். பின்னர் பிரகாரத்தின் வழியே வலம் வரும் போது அங்கு தனி சன்னிதியில் வடபுறம் நோக்கி காட்சி தரும் அஞ்சனையின் மைந்தன் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு மீண்டும் முன்மண்டபத்தை அடையலாம்.

ஆலய வரலாறு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருத்தலம் இருந்த இடத்தில் ஒரு சுயம்பு இருந்ததாகவும் அப்போதைய மக்கள் அதை வழிபட்டு வந்தனர். அப்போது அந்த சுயம்புவில் திடீரென்று ஒருநாள் ஒரு வைரக்கொடி போன்று பூணூல் தோன்றியதாக தெரிகிறது. அந்த பூணூலை அகற்ற ஆசாரி ஒருவர் சுயம்புவை உளியால் செதுக்கிய போது திடீரென்று கண்பார்வை இழந்தார். இதனால் பயந்து போன மக்கள் அந்த சுயம்புவை தற்போது மூலவர் உள்ள பீடத்தின் கீழ் வைத்து, அதன் மீது கல்லால் ஆன மூலவர் கரிவரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அதன்பிறகு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருப்பணிகளை செய்தனர்.

இதே போல இந்த திருத்தலத்தில் உள்ள ஸ்ரீராமர் உற்சவர் சிலையை, இப்பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் வைத்திருந்ததாகவும், அதை முறைப்படி பூஜைகள் செய்யாமல் விட்டு விட்டதாகவும், அந்த ராமர் விக்ரகத்தை பெருமாள் கோவிலில் வைத்து வழிபட வேண்டும் என்று ஊர் பெரியவர் கனவில் ராமரே வந்து கூறி சென்றதாக கூறப்படுகிறது. அந்த பெரியவரும், ராமர் விக்ரகம் வைத்திருந்த பக்தரை சந்தித்து, தன் கனவில் ராமர் வந்து கூறிய தகவலை தெரிவித்து   ராமர் விக்ரகத்தை கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டு உள்ளார். பின்னாளில் சீதா, லட்சுமணர், அனுமன் ஆகியோரது உற்சவ சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. அதன்பிறகு திருவிழா காலங்களில் சீதா, ராமர், லட்சுமணர், அனுமன் உற்சவ மூர்த்திகள் புறப்பாடு சென்றதால் சன்னிதியில் சாமி சிலைகள் இல்லாததை அறிந்து அங்கு கற்களால் ஆன சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த திருத்தலத்தில் கடந்த 5.1.1925–ம் ஆண்டு முதலே வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்பட்டு வந்து இருக்கிறது. அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கோவில் முன்மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

தத்து பரிகாரம்

இந்த திருத்தலத்தில் ஜாதக ரீதியாக தோ‌ஷம் கொண்டவர்களின் தோ‌ஷம் நீங்குவதற்காக தத்து பரிகாரம் என்ற பூஜையை பக்தர்கள் செய்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப பச்சை பயறும், உருண்டை வெல்லமும் கொண்டு வந்து பெருமாளுக்கு படைத்து, பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி தங்கள் தோ‌ஷங்களில் இருந்து விடுபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8 முதல் 9 மணியளவில் சுக்ர ஓரையில் சந்தான பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும், மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்போது சாமிக்கு நெய்தீபம் ஏற்றி, தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபாடு நடக்கிறது. கடைசியாக இந்த திருத்தலத்தில் கடந்த 2012–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திருத்தலத்தில் பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அஸ்தம் நட்சத்திரத்தன்று சுவாமி புறப்பாடு உண்டு. இது தவிர வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு உள்ளிட்ட விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.

இந்த திருத்தலத்தில் தினமும் காலை 6.30 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்

கோவையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் இந்த திருத்தலம் அமைந்து உள்ளது. பெரிய நாயக்கன்பாளையத்தில் இருந்து நடந்தே கோவிலுக்கு செல்லலாம். கோவையில் இருந்து பெரியநாயக்கன் பாளையத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

 –குருவன்கோட்டை ஸ்ரீமன்

காரிய சித்திக்கு பூ வழிபாடு

இந்த திருத்தலத்தில் புதிதாக மேற்கொள்ளும் காரிய சித்திக்கு பூ வைத்து பெருமாளின் அனுக் கிரகம் கிடைக்கிறதா? என்று பக்தர்கள் பார்க்கின்றனர். இதற்காக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நற்காரியத்தை மனதில் நினைத்து கொண்டு வெள்ளை அரளி பூவையும், சிவப்பு அரளி பூவையும் ஒரு தாளில் மடித்து கட்டி அதை மூலவர் வீற்றிருக்கும் கருவறையில் வைத்து பூஜை செய்கின்றனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கருவறையில் வைத்த தாளில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பிரித்து பார்க்கும் போது அதில் வெள்ளை அரளி பூ இருந்தால் நாம் மேற்கொள்ளும் காரியம் கை கூடும் என்பதும், சிவப்பு அரளி பூ வந்தால் தற்சமயத்துக்கு அந்த காரியம் மேற்கொள்ள வேண்டாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்