ஆன்மிகம்
ஆன்மிகத் துளிகள்

பிரகலாதன், நாராயணரிடம் கொண்டிருந்ததைப் போல இறைவனிடம் பலன் கருதாத பக்தியைச் செலுத்த வேண்டும்.
பக்தி

பிரகலாதன், நாராயணரிடம் கொண்டிருந்ததைப் போல இறைவனிடம் பலன் கருதாத பக்தியைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்வில் இன்பம், துன்பம் என்று எது கலந்து வந்தாலும், அவற்றை ஒரே மனநிலையில் பார்க்கும் எண்ணம் தோன்றும். காற்றில் நல்ல வாசனை, கெட்ட வாசனை என்று எல்லா வாசனைகளும் கலந்தே இருக்கும். ஆனால் எந்த வாசனையாலும் காற்று பாதிக்கப்படுவதில்லை.

–ஸ்ரீராமகிருஷ்ணர்.


அகந்தை

ஒருவர் மனதில் அகந்தை உண்டானால், அனைத்தும் உண்டாகும். அது ஒரு உருவமற்ற பேய் ஆகும். அந்த பேயை அடக்கினால் எல்லாம் அடங்கிப் போகும். எனவே அகந்தையே எல்லாம். அது என்ன என்று நாடுதலே எல்லாவற்றிலும் வெற்றியைத் தரும். அகந்தை எழும் இடத்தை உள்ளே ஆழ்ந்து அறிய வேண்டும். அப்போதே மனம் ஒளி பெறும்.

–ரமணர்.


ஏழ்மை

செல்வச் செழிப்பை இழந்து, அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து, நசுக்கப்பட்டு, என்றைக்கும் பட்டினியால் வாடியபடி உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை, யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால், இந்தியா மீண்டும் விழித்துக் கொள்ளும். இந்தியாவில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை வேராக இருப்பது, இந்த நாட்டு ஏழை மக்களின் இழிந்த நிலையே ஆகும்.

–விவேகானந்தர்.