சம்பந்தருக்கு ‘ஓசை’ கொடுத்த அம்மன்

உமையவளிடம் தனது மூன்றாம் வயதில் ஞானப் பால் பருகி, ஞானம் கைவரப் பெற்றவர் திருஞானசம்பந்தர். இவர் முருகப்பெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது.

Update: 2017-07-04 00:15 GMT
மையவளிடம் தனது மூன்றாம் வயதில் ஞானப் பால் பருகி, ஞானம் கைவரப் பெற்றவர் திருஞானசம்பந்தர். இவர் முருகப்பெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவர் சீர்காழியில் ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடத் தொடங்கி, ஈசனின் இறையருள் கைவரப் பெற்றார். அந்த மூன்று வயது பிஞ்சுக் குழந்தை, சீர்காழிக்கு மேற்கில் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றது. அங்குள்ள கொன்றை வனத்தில் எழுந்தருளி இருந்த ‘கொன்றைவன நாதரை’ வழிபட்டார். இந்த ஆலயத்தில் இருந்துதான் திருஞானசம்பந்தரின் சிவ தல யாத்திரை தொடங்கியது.

திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியின் முன்பாக நின்று, தனது சின்னஞ்சிறு கைகளை தட்டி கைத் தாளம் போட்டுக் கொண்டே இறைவனைத் துதித்து பதிகம் பாடத் தொடங்கினார்.

‘மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’


என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின.

தன் பிஞ்சு கரங்கள், சிவக்க சிவக்க கைத்தாளம் இட்டு துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்தார் சிவபெருமான். ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ ஈசன் முடிவெடுத்தார். அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையான அபிதகுசாம்பாள், அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்று முதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும், ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.

சுந்தரர் இத்தலம் பற்றி பாடிய திரு முறைப் பதிகத்தில், சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிவு செய்திருப்பதே இதற்குச் சான்றாகும். ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே’ என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர்.

இந்தக் கோவிலில் தற்போது ஓசை கொடுத்த நாயகி அம்பிகையின் சிலை இரண்டு உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன், புதியவர். கருவறையின் முன்மண்டபத்தில் வடபுறமாய் தனி சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி பழைய அம்மன்.

முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. அந்தச் சிலையில் சிறிது சேதம் ஏற்படவே, அதனை ஊர் மக்கள் மாற்றி விட்டு தற்போதுள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அன்று இரவு ஊர் மக்கள் கனவில் வந்த அம்மன், ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் ஊனம் ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த மக்கள், பழைய சிலையையும் மூலஸ்தானத்தின் அருகிலேயே தனிச் சன்னிதியில் வைத்து பூஜிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இத்தல அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்கிறார்கள். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் விநாய கரும், முருகரும் துவார பாலகர்களாக இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அழகும், அமைதியும் ஒருங்கே நிலவும் அதி அற்புத திருத்தலமான திருக்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் வடிக்கப்பட்டுள்ளது.

பிரம்மா, திருமால், லட்சுமி, இந்திரன், வருணன், எமன், அக்னி, வாயு, அகத்தியர், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இந்த ஆலயத்தை தரிசித்துள்ளனர்.

மந்தாகினி எனும் பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டுள்ளார். மேலும் இங்குள்ள கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வணங்கியுள்ளார். சிறிது காலத்தில் அந்தச் சிறுவன் பேசத் தொடங்கியிருக்கிறான் என்கிறார்கள் இந்தப் பகுதி பக்தர்கள். தன் மகன் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தாய், நன்றிப் பெருக்குடன் இத்தல இறைவனுக்கு 42 கிராம் தங்கத்தில் தாளம் செய்து கோவிலுக்கு அளித்துள்ளார்.

இப்படி வாய் பேச வராதவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அம்பாளையும், இறைவனையும் தரிசித்துச் சென்றுள்ளனர். அதில் இறைவனின் அருளால் வாய் பேச வந்தவர்கள், கோவிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் பெயரையும், ஊரையும் பதிவு செய்துள்ளனர். இதன் எண்ணிக்கை 600–யைத் தாண்டிச் செல்கிறது என்பதே, இத்தலத்திற்கு இருக்கும் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.

திக்குவாய் உள்ளவர்கள், பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகள் ஆகியோரை, இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்து, தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்ய வேண்டும். மேலும் 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, அந்தத் தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்ததன் பயனாக, மகாவிஷ்ணுவை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. திருமகள் திரு மணக்கோலம் கண்ட திருத்தலம் என்பதால் இது, ‘திருகோலக்கா’ என்று பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக்  கிழமைகளில் பெண்கள், இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். அதோடு சுவாமி, அம்பாளையும் வழிபாடு செய்து வர திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்.

நவக்கிரகங்களின் தலைமை பதவியை சூரியனுக்கு, இந்த தலத்தில் தான் ஈசன் வழங்கினார் என்று கூறப்படுகிறது. இந்த பேரருளை சூரியன் பெற்ற நாள், கார்த்திகை மாத ஞாயிறு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு சூரிய பூஜைசெய்ய, பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி அப்போது காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த ஆலயத்தின் முன்புறம் உள்ள திருக்குளமே, சூரியன் உண்டாக்கிய சூரிய தீர்த்தமாக திகழ்கிறது.

பக்தர்களால், ‘தாளமுடையார் கோவில்’ என்று அறியப்படும், இந்த ஆலயத்திற்கு கோபுரம் இல்லை. பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை உள்ளன. சனி மற்றும் அஷ்டமி நாட்களின் அந்திப்பொழுதில் இத்தல சனிபகவானையும், பைரவரையும் தொடர்ந்து அதே நாட்களில் 8 முறை வழிபட்டுவர நவகிரக தோ‌ஷங்கள் யாவும் அகலும்.

ஆண்டுதோறும் சித்திரைமாத திருவாதிரை நாளில் காலையில் சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் சம்பந்தருக்கு அம்பிகை ‘திருமுலைப்பால் வழங்கும் விழா’ நடக்கும். அன்று இரவில் சீர்காழி ஆலயத்தில் உள்ள சம்பந்தர் திருக்கோலக்கா  திருத் தலம் வந்து பதிகம் பாடி, ஈசனிடம் ‘பொற்றாளம் பெறும் விழா’ வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டால், கல்வியில் மேன்மை மற்றும் சகல நற்குணமும் அடையலாம்.

சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் இருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

மேலும் செய்திகள்