கொடுங்கள், பெற்றுக் கொள்வீர்கள்

‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்?’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள்.

Update: 2017-07-06 23:45 GMT
‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்?’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள். நல்ல சேமிப்புத் திட்டம், நீண்டகால வைப்புத் திட்டம், தங்க நகைத் திட்டம், ரியல் எஸ்டேட் இப்படி ஏதோ ஒரு சேமிப்பு திட்டம் குறித்து சொல்வார்கள்.

ஆனால் கிறிஸ்தவமோ, ‘இருப்பதை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்’ என்கிறது.

பிறருக்குக் கொடுப்பதை இயேசு அழுத்தம் திருத்த   மாகப் போதித்தார். ‘ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்’ என பகிர்தலை உற்சாகப்படுத்துகிறது விவிலியம்.

நியாயத்தீர்ப்பு நாள் ஒன்று உண்டு. அன்று நல்லவர்கள் வலப்பக்கமும், தீயவர்கள் இடப்பக்கமும் நிற்பார்கள். இருவருமே இறைவனை நேசித்தவர்கள், மத செயல்களில் ஈடுபடுபவர்கள், வழிபாட்டில் குறை வைக்காதவர்கள். ஆனால் இரு பிரிவினருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.

‘வலப்பக்கம் நிற்பவர்கள் ஏழைகளுக்கு உதவியவர்கள். பசியாய் இருந்தவர்களுக்கு உணவளித்தவர்கள். தாகமாய் இருந்தவர்களுக்கு நீர் கொடுத்தவர்கள். ஆடையின்றி இருந்தவர்களை உடுத்தியவர்கள். நோயுற்று இருந்தவர்களைப் பார்க்க வந்தவர்கள். அன்னியனாய் இருந்தவர்களை வரவேற்றவர்கள். அப்படி அவர்கள் ஏழைகளுக்குச் செய்தது எல்லாமே இறைவனுக்குச் செய்ததாயிற்று’ என்கிறார் கடவுள்.

‘பிறருக்கு உதவுகின்ற மனித நேய சிந்தனை இல்லாதவர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாது’ என்பது தான் இயேசு போதித்த சிந்தனைகளில் முக்கியமான ஒன்று.

அவருடைய வாழ்க்கையிலும் அவர் எப்போதுமே ஏழைகளின் பக்கமாகவே நின்றார். பிறந்த போது மாட்டுத் தொழுவம், வளர்கையில் தச்சுத் தொழிலாளியின் குடிசை, சாவின் போது சிலுவையில் குற்றவாளியாய் மரணம், மரித்தபின் ஏதோ ஒருவருடைய கல்லறையில் அடக்கம்... என ஏழைகளின் சாயலாகவே ஒவ்வொரு கட்டத்திலும் இருந்தவர் இயேசு.

‘பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை’ எனும் போதனையையே இயேசு முன்வைத்தார். ‘கொடை’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் அவர் தனது போதனைகளின் மூலமாக வைத்தார்.  

1. முகமலர்ச்சியோடு கொடுக்கவேண்டும். பிறருக்குக் கொடுப்பது என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம் என நினைத்து உதவ வேண்டும்.

2. ரகசியமாய் உதவ வேண்டும். வலது கையால் நீங்கள் செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக்கூடாது. மறைவாய் கொடுப்பதைக் காணும் இறைவன் பலன் தருவார்.

3. நல்ல சிந்தனையோடு கொடுக்க வேண்டும். கட்டாயத்தினாலோ, தனது பெயருக்காகவோ, கடமைக்காகவோ, பிறருடைய வசைக்குத் தப்பியோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கொடுப்பது தவறு. சக மனித கரிசனை, அன்பு இதன் அடிப்படையில் மட்டுமே உதவ வேண்டும்.

4. பிறருக்குக் கொடுப்பது என்பது விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது போல. அது பூச்சியாலும் துருவாலும் சேதமடையாது என்கிறார் இயேசு. அந்த மனநிலையோடு கொடுக்க வேண்டும்.

5. பிறருக்குக் கொடுப்பது என்பது இறைவனைப் புகழ்வதைப் போன்றது என்கிறது பைபிள். எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட வேண்டுமெனில், மீதம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்தே அளவிட வேண்டும்.

6. குற்ற உணர்விலிருந்து விடுபட பிறருதவிப் பணிகளை செய்யக் கூடாது. இயேசுவின் மீதான அன்பும், சக மனிதன் மீதான அன்பும் மட்டுமே ஈகையை தூண்டவேண்டும். உள்ளதிலிருந்து கொடுப்பதை விட, உள்ளதையெல்லாம் கொடுப்பதும், உள்ளத்தையே கொடுப்பதும் உயர்வானவை.

7. கடவுள் திரும்பத் தருவார் எனும் எண்ணத்தில் நாம் உதவக் கூடாது. கடவுள் இதயத்தைப் பார்க்கிறவர், நமது உண்மையான தேவைக்கு ஏற்ப அவர் நமக்கு அளிப்பார்.

8. நம்மிடம் இருக்கும் மண்ணுலக செல்வங்களை நாம் பிறருக்கு அளிக்கும் போது, இறைவன் விண்ணுலக செல்வங்களை நமக்கு அளிப்பார்.

9. எவ்வளவு கொடுத்தோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுத்தோம் என்பதே முக்கியம். அளவைப் பார்த்து மதிப்பிடுவது மனித இயல்பு, அகத்தைப் பார்த்து மதிப்பிடுவது இறை இயல்பு.

10. கொடுங்கள். மனிதநேயம் என்பது பெறுதலில் அல்ல, கொடுத்தலில் தான் நிறைவு பெறும். கொடுக்கக் கொடுக்க வளர்வது அன்பு மட்டும் தான்.

‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’. (நீதிமொழிகள் 22:9)

சேவியர், சென்னை.

மேலும் செய்திகள்