ஆன்மிகத் துளிகள் : ஓலமிட்ட விநாயகர்

ஒரு முறை சுந்தரரும், சேரமான் பெருமானும், திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2017-07-17 23:00 GMT
ரு முறை சுந்தரரும், சேரமான் பெருமானும், திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அக்கரையில் நின்ற சுந்தரர், ஆலயம் வர வழி இல்லாமல் அங்கிருந்தே பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் ‘ஓலம் ஓலம்’ என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தினார். பின்னர் சுந்தரரும், சேரமானும் மறுகரைக்கு வந்து இறைவனை தரிசித்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இங்குள்ள விநாயகர் ‘ஓலமிட்ட விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆவுடையில் விநாயகர்

இத்தல முருகப்பெருமான் வில்லேந்தி ‘தனுசு சுப்ரமணியம்’ என்ற திருநாமத்தில் அருள்கிறார். கிருத்திகை, விசாகம், சஷ்டி நாட்களில் இவரை வழிபட்டு வந்தால் பகை, கடன் நீங்கும். வில்லேந்திய வேலவன் சன்னிதி அருகில் வடமேற்கு மூலையில் ஆவுடை விநாயகர் அருள்கிறார். உலகில் வேறு எந்த தலத்திலும் காண இயலாத ஆவுடை விநாயகர் இவர். பொதுவாக ஆவுடையின் மேல் சிவலிங்கமே இருக்கும். ஆனால், இங்கு  விநாயகர் சதுர வடிவில் ஆவுடையார் மீது எழுந்தருளி இருக்கிறார். இவரை பிரதோ‌ஷம், சங்கட ஹர சதுர்த்தி, மாதாந்திர சிவராத்திரி நாட்களில் வழிபட்டு வந்தால், ஈசன், அம்பாள், விநாயகர் மூவரையும் ஒருசேர வழிபட்ட பலன் கிடைக்கும். இரட்டிப்பு பலன் வந்து சேரும்.

ஆயுள் தரும் ஆட்கொண்டார்

சுசரிதன் என்னும் சிறுவனைப் பிடிக்க வந்தான் எமன். அப்போது ஈசன் எமனிடம் இருந்து சிவனை ஆட்கொண்டார். இதனால் இங்குள்ள இறைவனுக்கு ‘ஆட்கொண்டார்’ என்ற பெயரும் உண்டு. ஆட்கொண்டார் சன்னிதி தெற்கு கோபுர வாசலில் உள்ளது. ஆட்கொண்டார் சன்னிதியில் எப்போதும் குங்கிலியம் (சாம்பிராணி) புகைந்து கொண்டே இருக்கும். திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டுமாம். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக கூறுகிறார் கள்.

அர்ச்சகராக வந்த ஈசன்

ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார். இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது. அப்போது ஐயாறப்பரே, அந்த அர்ச்சகரின் வடிவில் வந்து தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட புண்ணிய பூமியாகவும் இந்த இடம் திகழ்கிறது. இந்நிகழ்வை ‘ஐயாறு அதனில் சைவனாகியும்’ என்று தமது திருவாசகத்தில் பதிவு செய்துள்ளார் மாணிக்கவாசகர். கருவறையில் ஐயாறப்பரின் கூந்தல் (சடை) இன்றும் வளர்வதாக ஐதீகம். எனவே முதல் பிரகாரத்தில் வலம் வந்தால் ஈசனின் சடையை மிதிக்கும் பாவம் உண்டாகும் என்பதால், இங்கு பக்தர்கள் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்