இஸ்லாம் : திருமணம்

திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.

Update: 2017-07-25 09:52 GMT
ரு மனங்கள் இணைவதே திருமணம். ஒவ்வொருவரையும் ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக திருமணம் திகழ்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஏற்ற வழி திருமணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

“நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களிடையே அன்பையும் கிருபையையும் உண்டாக்கி இருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்திக்கக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன” (திருக்குர்ஆன்-30:21) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.

இதனால்தான் நபிகளார், “திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.

“நான்கு விஷயங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்திற்காக, அவளது குலச்சிறப்புக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப்பற்றுக்காக. நீங்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்களையே மணந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நலம் உண்டாகட்டும்” என்று நபிகளார் நவின்றார்கள்.

மார்க்கப்பற்றுள்ள பெண்களிடம் இறையச்சம், அன்பு, நற்பண்பு, நாணம் ஆகிய குணங்கள் குடிகொண்டிருக்கும் என்பது நபிகளாரின் நம்பிக்கையாகும்.

திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நபிகளார் வற்புறுத்தியுள்ளார்கள்.

“நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னிடம், ‘அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும். ஏனெனில் அது உங்கள் இருவரிடையே நட்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும்’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பவர்: முகீரா (ரலி), ஆதாரம்: திர்மிதீ, நஸாயீ).
இஸ்லாமியத் திருமணம் என்பது ஆண்-பெண் ஆகிய இருவருக்கு இடையே செய்யப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். இதைத்தான் திருக்குர்ஆனில், “சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே; மேலும் அந்த மனைவியர் உங்களிடம் இருந்து உறுதியான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்களே” (4:21) என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும்.
“திருமணத்தைப் பலர் அறிய வெளிப்படையாகச் செய்யுங்கள். மேலும் அதைப் பள்ளிவாசல்களில் நடத்துங்கள்” என்பது நபிமொழியாகும்.

“குறைந்த செலவில் குறைந்த சிரமங்களுடன் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திரு மணத்தின்போது பெண் வீட்டாருக்கு எந்தவிதத்திலும் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது. இதற்காக திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர்.

“எந்த வலிமாவில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ, அந்த வலிமாவின் உணவே மிக மோசமான உணவாகும். எவர் வலிமா விருந்திற்கான அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்” என்று நபிகளார் நவின்றார்கள்.

மணம் புரிந்து கொண்ட ஆணும், பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.

கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் அழகிய உவமை மூலம் எடுத்துக் கூறுகிறது.

“அவர்கள் (பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் (ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (2:187).

இந்த வசனத்தில் பல பொருட்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆடை, மனிதனுக்கு அழகைக்கொடுக்கிறது. ஆடை, மனிதனின் மானத்தைப் பாதுகாக்கிறது. ஆடை மனிதனுக்கு மரியாதையை அளிக்கிறது. 
அதனால்தான் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், “பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண், விலா எலும்பில் இருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். 
எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “உங்கள் அழகிய குணமிக்கவர்தான் இறைவிசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர். உங்களில் சிறந்தவர், மனைவியிடம் சிறப்பாக நடந்து கொள்பவரே” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மீதி)

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உலகம் சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது நல்ல மனைவியே ஆவாள்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

மேற்காணும் நபி மொழியின் மூலம் நல்ல மனைவி கிடைக்கப் பெற்றவர் உலகில் எல்லாம் கிடைக்கப் பெற்றவர் ஆவார்.

-எஸ். அமீர் ஜவ்ஹர், காரைக்கால்.

மேலும் செய்திகள்