பதினாறு பேறுகளை தந்தருளும் லட்சுமி பாதங்கள்

பணம் எனப்படும் செல்வத்திற்கு அதிதேவதை மகாலட்சுமி என்று புராணங்கள் கூறுகின்றன. அவளது அருளைப் பெற வேண்டி விசேஷ நாட்களில், வீடுகளில் லட்சுமி பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வார்கள்.

Update: 2017-07-25 10:16 GMT
இறையருள் தரும் சாதனங்கள்

ன்மிக உலகில் மறைபொருளாக இருக்கும் பல விஷயங்களில் திருவடி எனப்படும் ‘ஸ்ரீபாத’ வழிபாடும் ஒன்று. இறைவனை விடவும் அவனது நாமமும், அவனது திருவடியும் மகிமை பெற்றவை என்பது ஆன்றோர்களின் வாக்கு. அதேபோல் இறைவனது திருவடிகளை தமது இதயத்தில் வைத்து போற்றக்கூடிய அருளாளர்களின் திருவடி, இறைவனை விடவும் பெருமை பெற்றது என்பதும் ஆன்மிக உலகில் பரவலான நம்பிக்கையாக உள்ளது. அதாவது திருவடிகளுக்கு உள்ள மதிப்பானது ஆன்மிக வாழ்வு மற்றும் உலகியல் வாழ்வு ஆகிய இரண்டு நிலைகளிலும் பெருமளவு முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது.

இறைவன், இறைவி, குரு, தாய்-தந்தையர் ஆகியோர் களது திருவடிகளை, பாதுகைகள் எனப்படும் திருவடிகள் மூலம் வழிபடுவது ஒருவகை ஆன்ம ஞான மரபாக இருந்து வருகிறது. நமது நாட்டில் பல பாகங்களிலும் இறைவனது திருவடியை வணங்குவது காலம் காலமாக இருந்து வருகிறது.

பல்வேறு சம்பிரதாயங்கள்

சமண மதத்தில் தங்களது குருவின் திருவடிகளை வைத்தும், பவுத்த மதத்தில் புத்தரின் திருவடி பதித்த பீடத்தை ‘பாத பீடிகை’ என்ற பெயருடனும், வைணவ சம்பிரதாயத்தில் நெற்றியில் இடும் நாமமானது மஹாவிஷ்ணுவின் பாதம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. 

இறைவனது திருவடியை, குருவின் திருவடியாக போற்றுவதும் வைணவ சம்பிரதாய வழக்கமாக இருக் கிறது. வைணவ கோவில்களில் பக்தர்கள் தலைமேல் சடாரி வைப்பது என்பது திருவடியின் ஆசியாக கருதப்படுகிறது. வேதாந்த தேசிகர் என்ற வைணவ ஆச்சாரியர் இறைவனது திருவடிகளை புகழும் ஆயிரம் பாடல்கள் கொண்ட ‘பாதுகா சகஸ்ரம்’ என்ற ஒரு நூலையே தந்திருக்கிறார். குருவாயூர் கிருஷ்ணனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்ரி, துர்க்கையின் பாதார விந்தங்களை ‘ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற 70 ஸ்லோகங்களாக பாடி, பிரார்த்தனை செய்து அப்பொழுதே முக்தியை பெற்றதாக ஆன்மிக தகவல் உண்டு.

வடமாநில தீபாவளி பூஜை

இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளியை ஒட்டி லட்சுமி பூஜை செய்யப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். தீபாவளியன்று லட்சுமி வழிபாடு எப்படி வந்தது? என்று ஒரு புராண கதை உண்டு. அதாவது, ஒரு முறை மகாலட்சுமியை, மகாபலி சக்ரவர்த்தி சிறை பிடித்து, தனது நாட்டுக்கு எடுத்து சென்றதால், அவனது நாடு, நகரம் அனைத்திலும் செல்வம் பெருகியது. அதனால் மகாலட்சுமியை அவன் விடுதலை செய்ய மனமில்லாமல் இருந்தான். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவனை அழித்த போது லட்சுமி சிறையிலிருந்து மீண்டதாக சொல்கிறது புராணம்.

அதனால் தீபாவளி சமயங்களில் வட மாநிலங்களில் லட்சுமி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிறிய அளவில் மஞ்சள் அல்லது அரிசி மாவு கொண்டு மகாலட்சுமியின் பாதங்கள், வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரையிலும் அழகான முறையில் வரையப்படுகிறது. அதை மேலும் அலங்கரிக்கும்படி விதவிதமான ரங்கோலி வகை கோலங்களும் போடப்படும். பூஜையின்போது மகாலட்சுமிக்கு தங்க நகை அலங்காரம் செய்யப்பட்டு, மந்திரங்கள் உச்சரிக்கப்படும். அந்த பூஜையானது, அன்றைய தினத்தில் எவ்விதமான குறையும் இல்லாமல் நடந்துவிட்டால், வருடம் முழுவதும் தங்கள் வீட்டில் ஐஸ்வரியம் தங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. பூஜை சமயங்களில் தாமரை தண்டு திரியிட்ட தீபம் ஏற்றுவதும், கோ பூஜை செய்வதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத்தருவதாக ஐதீகம்.

மகாலட்சுமியின் இருப்பிடம்

பணம் எனப்படும் செல்வத்திற்கு அதிதேவதை மகாலட்சுமி என்று புராணங்கள் கூறுகின்றன. அவளது அருளைப் பெற வேண்டி விசேஷ நாட்களில், வீடுகளில் லட்சுமி பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வார்கள். மேலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை தானம் செய்வதும் வழக்கம். உண்மை பேசுபவர்கள், தூய்மையாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், புறம் பேசாதவர்கள், குழந்தைகளை துன்புறுத்தாதவர்கள் ஆகியோர்களிடம் மகாலட்சுமி எப்போதும் இருப்பாள் என்கிறது புராணங்கள். அதனால் மகாலட்சுமியின் பாத வழிபாடு என்பது இக வாழ்வின் நலன்களை பெற்றுத் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது ‘காமதேனு’ என்ற பசு, பொன்மயமான ஒளி பொருந்திய ‘உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ‘ஐராவதம்’ என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை, பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய விருட்சங்கள், ‘கவுஸ்துபம்’ என்ற அதிசய மணிமாலை, லட்சுமியின் அக்கா ஜேஷ்டாதேவி, அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினர். அதன் பிறகு தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. தாமரை மலர் மாலையை கைகளில் ஏந்தியவளாய் அவதரித்த அவள், தனக்கு உகந்தவர் மகாவிஷ்ணு என்று அறிந்து அவருக்கு மாலையை அணிவித்து அவரது மார்பில் இடம்பெற்றாள். அவ்வாறு தோன்றிய மகாலட்சுமியின் பாதங்களில் 16 வகையான சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை கண்ட தேவர்கள் அனைவரும் மகாலட்சுமியின் பாதங்கள் பதிந்த சின்னங்களை தம்முடன் எடுத்துச்சென்று தமது இல்லங்களில் வைத்து பூஜை செய்து பல ஐஸ்வரியங்களை பெற்றதாக ஐதீகம்.

லட்சுமியின் அஷ்ட சக்திகள்

மகாலட்சுமி தன்னை அஷ்ட சக்திகளாக இருத்தி அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். அத்தகைய அஷ்ட சக்திகளின் பெயர்கள் வருமாறு:
ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி.

ஒவ்வொரு யுகத்திலும் மகாலட்சுமியானவள் அஷ்ட லட்சுமிகளின் உருவம் தாங்கி அவதரிப்பதாகவும், அந்தந்த யுகங்களுக்கு ஏற்றவாறு அஷ்ட லட்சுமிகளின் பெயர்களும் மாற்றம் பெறும் எனவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

கொல்கத்தாவில் அட்சய திருதியை அன்று, ‘ஹல்கத்தா’ என்ற நாளாக லட்சுமி பூஜையை கொண்டாடுவதோடு, களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி உருவத்துக்கு பூஜைகளையும் செய்கிறார்கள். சகல செல்வங்களுக்கும் சொந்தக்காரனான குபேரன் அந்த நாளில்தான் தவம் செய்து, லட்சுமியிடமிருந்து நவ நிதிகளையும் பெற்றான் என்று ‘லட்சுமி தந்திரம்’ குறிப்பிடுகிறது.

வரலட்சுமி விரதம்

தென் மாநிலங்களில் வரலட்சுமி பூஜை என்ற லட்சுமி வழிபாடு கடைப்பிடிக்கப்படு கிறது. ஆந்திராவில் இது சிராவண மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மகாலட்சுமியை வீடுகளில் எழுந்தருளும்படி வேண்டி, சோடச உபசார பூஜை எனப்படும் 16 வகை உபசாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். பலவிதமான இனிப்பு பொருட்கள் நிவேதனம் செய்து வழிபடுவதோடு, அன்றைய தினத்தில் பெண்கள், தங்களது மாங்கல்ய பலம் பெருகவும், வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும் விரதமிருந்து பிரார்த்தனை செய்துகொள்வதும் வழக்கமாகும்.

லட்சுமி பாதத்தில் 16 சின்னங்கள்

லட்சுமியின் பாதத்தில் உள்ள 16 சின்னங் களைப் பற்றியும், அவற்றால் என்ன பலன் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

இடது பாதம்

*வில், அம்பு - லட்சியத்தை நோக்கிய பார்வைக்காக..
*மீன் - வளம் மற்றும் நலம் ஆகியவற்றுக்காக..
*கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..
*சந்திரன் - ஒளி பொருந்திய தூய எண்ணங்களுக்காக..
*திலகம் - வெற்றியை குறிப்பிடக்கூடியதாக..
*முக்கோண வடிவம் - நிச்சய வெற்றிக்காக..
*சக்கர ரேகை - சர்வ மங்களங்களையும் குறிப்பிடும் சின்னம்..

வலது பாதம்

*ஸ்வஸ்திக் - ஞானம் மற்றும் வளம் கிடைக்க..
*சக்கரம் - தீயவற்றை அழிக்க..
*சங்கு - சக்தி மற்றும் வெற்றிக்காக..
*சூரியன் - சகல காரிய வெற்றிக்காக..
*கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..
*துவஜம் எனப்படும் கொடி - சரியான பாதையை காட்டுவதற்காக..
*வஜ்ராயுதம் - லட்சியத்தை தவறாது அடைவதற்காக..
*தாமரை - செல்வத்தை குறிக்க..
*திரிசூலம் - மும்மூர்த்திகளையும் குறிப்பிட..

மகான்கள் வாக்கு

‘அன்னையே.. உனது திருவடிகள்தான் என் போன்ற பக்தர்களை காப்பாற்றுவதோடு, மனதில் இருக்கும் பயத்தையும் அகற்றுகின்றன. உன்னைத் தவிர வேறு யார்தான் எங்களை காக்க முடியும்.? கேட்பதற்கு மேலாகவே வரங்களை அருளும் தாயாக அல்லவா நீ இருக் கிறாய்..? அதனால் உனது திருவடிகளை வணங்குகிறோம். எங்களைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசீர்வதிப்பாயாக.!’

-என்று ஆதிசங்கரர் அன்னை பராசக்தியின் திருவடிகளை தமது ‘சவுந்தர்ய லகரியில்’ புகழ்ந்து போற்று கிறார்.

‘நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் அறிவார்.?
நாலு மறை முடியும் அகப்பேய்
நற்குரு பாதமடி.!’

-என்று, ‘இறைவனை அறிய யாரால் முடியும்? நான்கு வேதங் களின் முடிவாக இருப்பது நற்குரு பாதங்கள்தான்..’ என்று அகப்பேய் சித்தர் பாடுகிறார்.

பூமாதேவி ஸ்லோகம்

முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது.

அந்த சுலோகமானது..

‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’ 
-என்பதாகும்.

அதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள்.

மேலும் செய்திகள்