திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா

திருத்தணி முருகன் கோவில் ஆடிப்பூர விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2017-07-26 22:30 GMT

திருத்தணி,

ஆடிப்பூர விழாவையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

முருக பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீன்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூர விழாவையொட்டி மலைக்கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது,

விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

உத்திரமேரூர் வடவாயிற்செல்வி துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள முத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து 501 பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் துர்க்கையம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

காஞ்சீபுரம் கோனேரிக்குப்பம் கனக துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. 108 பெண்கள் பால்குடங்களை தலையில் வைத்து காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து காமாட்சியம்மன் கோவில் மாட வீதி, கம்மாளத்தெரு, அப்பாராவ் தெரு வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கனக துர்க்கை அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் மற்றும் தக்கார் சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

குன்றத்தூர் தேவி பொன்னி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து 1,600 பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு குன்றத்தூர் மெயின்ரோடு, துலுக்கத்தெரு உள்ளிட்ட நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். முடிவில் பொன்னி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா இந்த கோவிலில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 504 பக்தர்கள் பால்குடம் ஏந்தியும் 18 பக்தர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தியும் விநாயகர் கோவிலில் இருந்து புற்றுமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் நிர்வாகி சுலோச்சனா ஏழுமலை தலைமையில் விழா நடந்தது.

மேலும் செய்திகள்