ஆன்மிகம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில்ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு யாகம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
திண்டுக்கல்,

ராகு-கேது பெயர்ச்சியானது, நேற்று பகல் 12.42-க்கு நடந்தது. இதில், ராகு பகவான், ஆயில்யம் நட்சத்திர 4-ம் பாதத்தில் கடக ராசியிலும், கேது பகவான், அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசியிலும் பெயர்ச்சி அடைந்தனர். ராகு, கேதுவை தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை கொண்டவை.

ஆனால் ராகு-கேது மட்டும் பின்னோக்கி செல்லும் தன்மை உடையன. அதனால் இந்த இரண்டு கிரகங்களும் சாயா (நிழல்) கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ராகு-கேது பெயர்ச்சியானது, மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு அற்புத பலன் களை வழங்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி யாகம் நடந்தது. கோவில் பிரகாரத்தில் காலை 10.30 மணியளவில் சிறப்பு சிவயாகமும், சுவாமி காளகத்தீசுவரருக்கு, பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் நவக்கிரகத்தில் உள்ள ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுவாமியின் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு 16 வகையான அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் அவரவர் பெயர், ராசி, நட்சத் திரத்தைக்கூறி அர்ச்சனைகள் செய்து கொண்டனர்.

பழனி பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் கொடிமர மண்டபத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. பகல் 12.42 மணிக்கு ராகு சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ராகுவுக்கும், கேதுவுக்கும் 16 வகை அபிசேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை மற்றும் தீபாரதனைகளை கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணி செய்தார்.
அதைத்தொடர்ந்து பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.