ஆன்மிகம்
குச்சனூரில் ஆடி திருவிழாவையொட்டிசனீஸ்வரர்- நீலாந்தேவி திருக்கல்யாணம்

குச்சனூரில் ஆடி திருவிழாவையொட்டி சனீஸ்வரருக்கும், நீலாந்தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சின்னமனூர்,

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரபகவான் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று கோவில் தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால முத்து மற்றும் அர்ச்சகர்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர்.

பின்னர் கோவில் வளாகத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சனீஸ்வரபகவானுக்கும்- நீலாந்தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நேற்று வரலட்சுமி நோன்பு தினத்தில், திருக்கல்யாணம் நடைபெற்றதை அடுத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் மற்றும் வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கிருஷ்ணவேணி செய்திருந்தார். மேலும் ஆடி திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு சாமிக்கு மஞ்சனக்காப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.