பன்மைச் சமூகத்தில் நமது செயலின் தாக்கம்

தனியொரு முஸ்லிம் ஒரு செயலைச் செய்தால் அதனை ஒரு தனிமனிதரின் செயல் என்று சகோதர சமுதாயத்தவர்கள் கூறுவதில்லை.

Update: 2017-08-08 10:07 GMT
நாம் பல்லின சமூகத்தில் வாழ்கிறோம். ஆகவே சர்வ சாதாரணமாகச் செய்யும் நமது செயல் கள் சகோதர சமூகத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

தனியொரு முஸ்லிம் ஒரு செயலைச் செய்தால் அதனை ஒரு தனிமனிதரின் செயல் என்று சகோதர சமுதாயத்தவர்கள் கூறுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தோடு தொடர்புபடுத்தித்தான் அதனைப் பார்ப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கூட நிலைமை இவ்வாறுதான் இருந்தது. அப்போது அங்கே கிறிஸ்தவர்கள், யூதர்கள், இப்ராஹீமிய்யாக்கள், சிலை வணக்கம் செய்பவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆயினும் அவர்களுக்கு இடையே எவ்வித சமயம் சார்ந்த கைகலப்போ சண்டையோ நடந்த தில்லை. (தனிப்பட்ட கோத்திரச் சண்டைகளைத் தவிர).

எப்போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்கத் தொடங்கினார்களோ அவர்கள் அப்போது எல்லோரும் ஓரணியில் ஒன்றிணைந்து இஸ்லாத்தையும் நபிகளாரையும் எதிரியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அன்று அந்த சமூகத்தில் இஸ்லாத்திற்கான எதிர்ப்பு இருந்ததைப் போன்றே இன்றும் இருக்கிறது, என்றும் இருக்கும். இது இயற்கை. இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த தனியொரு முஸ்லிம் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்றாரா இல்லையா என்றெல்லாம் சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பார்ப்பதில்லை. மாறாக அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம் தனிமனிதனே இஸ்லாத்தின் வெளிப்பாடு.

நாமே இதனைக் கண்கூடாகப் பார்க்கலாம். மது அருந்தும் ஒரு முஸ்லிமைக் குறித்தோ அல்லது பொய் சொல்லும் ஒரு முஸ்லிமைக் குறித்தோ சகோதர சமயத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘இவர் உங்களைப் போல் நல்ல முஸ்லிம் இல்லையே. இவரும் எங்களைப் போன்றுதான் எல்லாவற்றையும் செய்கிறார்’.

சில காலம் முன்புவரை இப்படித்தான் கூறினார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல.. இப்போது என்ன கூறுகின்றார்கள்? ‘முஸ்லிம்களில் கூட உங்களைப் போன்ற நல்லவர்களும் இருக்கின்றார்கள்’.

இரண்டு வாக்குமூலத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது நல்ல முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று பொருள். எவ்வளவு பெரிய (ஏ)மாற்றம். அவர்களுடைய இந்தப் பார்வைக்குக் காரணம் யார்? நமது பொறுப்பற்ற தன்மைதானே!

பிற சமூகத்தினரைப் போன்று இஸ்லாமிய சமூகம் குறிப்பிட்ட தவறை செய்திருக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். காரணம், ‘முஸ்லிம்களின் மார்க்கம் அவ்வாறு தவறு செய்வதற்கு இடம் கொடுக்காது. பின் ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள்..?’ என்ற கண்ணோட்டத்துடன்தான் அவர்கள் நம்மைப்பார்க்கின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் ஒட்டுமொத்த சமூகமும் குற்ற வாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறது.

நம்மை சாட்சியாளர்களாக அல்லாஹ் படைத்துள்ளான். ஆகவே முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனையும் இஸ்லாத்தின் சாட்சியாளர்களாகத்தான் அவர்கள் பார்ப்பார்கள். நாம் தவறாக நடந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் களையும் குற்றவாளிக் கூண்டில்தான் ஏற்றுவார்கள். அதைத்தானே அல்லாஹ், ‘நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும்..’ (2:143) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

முஸ்லிம் என்றால் நேர்மையுடன் இருப்பார்.. தூய்மையுடன் இருப்பார்.. என்பன போன்ற சிந்தனைகளே ஏனைய சமூகத்தினரின் உள்ளங்களில் நம்மைக் குறித்த நல்லெண்ணமாக உள்ளது.

அந்தத் தாக்கம் தனி மனிதனால் நாசம் செய்யப்படும்போது ஒட்டுமொத்த சமூகம் குறித்த பார்வையும் நாசமாகிவிடுகிறது. எனவே முஸ்லிம் என்பவன் மிகமிக கவனமுடனும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

நமது வாழ்க்கை முறையும் அப்படித்தானே இருக்கிறது. வசிக்கும் இடங்களில் முடிந்தவரை கூட்டாகவே வசிக்கிறோம். பள்ளியில் தொழும்போது கூட்டமாகத் தொழுகிறோம். நோன்பை கூட்டாக வைக்கிறோம். ஹஜ்ஜை கூட்டமாக செய் கிறோம். பயானுக்குக் கூட்டம், ஜும் ஆவுக்குக் கூட்டம் என்று அனேக வணக்கங்களைக் கூட்டாகத்தானே செயல்படுத்துகிறோம்.

எனவே நம்மில் ஒருசிலர் செய்கின்ற சிறு தவறுகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கே கெட்ட பெயர். ஆகவே ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதனும் சமூகப் பொறுப்புணர்வை தமது கடமையாகக் கருதவேண்டும்.

உயர் பதவியில் இருப்பவர் அல்லது மக்களுக்கு அறிமுகமானவராக இருக்கும் ஒரு முஸ்லிம் இந்தப் பொறுப்புணர்வு விஷயத்தில் அதிக கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் மிகமிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுடைய செயல்பாடுகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“ஒரு முஸ்லிம் வியாபாரியின் ‘ஈமான்’ (இறையச்சம்) எங்கே இருக்கிறது என்றால்.. தராசின் ஊசி முனையில் இருக்கிறது” என்பார்கள். ஒரு முஸ்லிம் மளிகைக்கடைக்காரரின் ஈமான் அவரது நம்பிக்கை மற்றும் நாணயத்தில் இருக்கிறது. இதுதான் சமூகப் பொறுப்புணர்வு. இதனை உணராமல் ஒருசிலர் செய்யும் தவறுகள்தான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கெட்ட பெயரை வாங்கித் தரு கிறது.

எங்கு செல்கிறோம் நாம்?

‘ஃப அய்ன தத்ஹபூன்’ என்று குர்ஆன் கேட்கிறது. அதாவது ‘நீங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’ (81:26) என்று பொருள். வீட்டைவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு நாளும் நம்மை நாமே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ‘இன்று நான் எங்கே செல்கிறேன்..?’, ‘இப்போது செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல் மூலம் நான் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன்..?’.

நம்மை நாமே கேட்கவேண்டிய கேள்விகள் இவை. இவ்வாறு ஒவ்வொரு செயலிலும் நாம் எங்கே போகின்றோம் என்று கேட்கவேண்டும். அதுதான் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு.

ஆக.. ‘இது அப்துல்லாஹ்வின் செயல்..’, ‘இது இப்ராஹீமின் செயல்..’ என்று தனிமனிதச் செயல்களாகப் பார்க்கப்படுவதைவிட சமூகம் சார்ந்த செயலாகவே நமது செயல்கள் பார்க்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால் பெரும்பான்மை நாட்டில் வாழும் முஸ்லிமைவிட சிறுபான்மையினராக வாழும் நாட்டில்தான் ஒரு முஸ்லிம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது வருகையின் நோக்கமே நமது நோக்கமாகவும் இலக்காகவும் இருக்க வேண்டும். நபியின் வருகையின் நோக்கம் என்ன? ‘நற்பண்புகளை பூரணம் செய்யவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபிகளார் குறிப்பிட்டார்கள். இதுதான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய ஒரு முஸ்லிமின் நோக்கமும் இதுதான். தோற்றத்தாலோ, ஆடையாலோ, மொழியாலோ, தொழிலாலோ, குடும்பத்தாலோ ஒரு முஸ்லிமுக்கு எந்த சிறப்பும் கிடையாது.. கிடைக்காது. மாறாக சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய நடத்தைதான் அவரை நல்ல மனிதனாக அடையாளப்படுத்தும்.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல். 

மேலும் செய்திகள்