நற்செய்தி சிந்தனை : தொண்டு

தந்தையின் சித்தம் எப்படி உள்ளதோ? அப்படித்தான் எதுவும் நடக்கும் என்பதே, இந்நற்செய்தியின் உண்மைப் பொருள் ஆகிறது.

Update: 2017-08-08 10:15 GMT
ந்த நற்செய்தியைப் படியுங் கள். சிந்தியுங்கள். தெளிவு பெறுங்கள்.

அக்காலத்தில் செபதேயு என்பவர் இருந்தார். அவருடைய மனைவி தம் மக்களை அழைத்துக் கொண்டு, இயேசு பிரானிடம் சென்றார். இயேசுவிடம் நெருங்கி வந்த அவர், இயேசுவைப் பார்த்து மிகவும் பணிவோடு நின்றார். இயேசு பெருமான், அவரைப் பார்த்து, ‘உமக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார்.

செபதேயுவின் மனைவி அவரை நோக்கி, ‘நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உனது அரியணையின் வலப்புறமும், இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்’ என்று வேண்டிக்கொண்டார்.

இயேசு பெருமான் மறுமொழியாக, ‘நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப் போகும், துன்பமான கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘முடியும்’ என்றார்கள்.

அவர் அவர்களை நோக்கி, ‘ஆம்! என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது என் செயல் அல்ல. மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ, அவர்களுக்கே அருளப்படும்’ என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப் பேர்கள், அச்சகோதரர் இருவர் மீது கோபம் கொண்டனர். இயேசு அவர்களை அழைத்து, ‘பிற இனத்தவரின் தலைவர்கள், மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள் மீது, தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள், முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும், தொண்டு ஏற்பதற்கு அல்ல- தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று கூறினார்.

இந்நற்செய்தியைப் படிக்கும்போது, வரலாற்றையும் நினைவில் கொள்வோம்.

செபதேயுவின் மக்களில் ஒருவர்தான் ‘புனித யாக்கோபு’ என்பவராவார். இவர் இயேசுவோடு நெருங்கி இருந்தவர்.

குறிப்பாகச் சொல்லப்போனால் சீமோனின் மாமியாரை குணப் படுத்தியபோதும், யாயீரின் இறந்த மகளை, உயிருடன் எழுப்பியபோதும், ‘ஜெத்சமெனி’ என்ற தோட்டத்தில், இயேசு பெருமான் ரத்த வியர்வை வியர்த்தபோதும், இயேசு உருமாற்றம் அடைந்தபோதும் கூடவே இருந்தவர். எல்லாவிதத் துன்பங்களையும் அனுபவித்தவர்.

இவ்வரலாற்றை நினைவில் கொண்டு, இந்நற்செய்தியின் ஆழத்தை எண்ணிப் பார்ப்போம்.

முதலில், செபதேயுவின் மனைவி இயேசு பிரானைப் பார்த்து, நீர் ஆட்சி செய்யும்பொழுது, எம் மக்களில் இருவரில் ஒருவர், உமது அரியணையின் வலப்புறத்திலும், மற்றொருவர் உமது அரியணையின் இடப்புறத்திலும் அமர வேண்டும் என்று ஏன் கேட்டாள் என்பதற்குப், பின்புலம் ஒன்று இருப்பதை இயேசு பிரானே விவரிக்கிறார்.

‘பிற இனத்தவரின் தலைவர்கள், மக்களை அடக்கி ஆள்கிறார்கள். உயர்ந்த குடியில் பிறந்த மக்கள், அவர்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். இவற்றை நீங்கள் அறிவீர்கள். ஆகவே அப்படி இருக்கக் கூடாது’ என்கிறார்.

அதனால்தான் செபதேயுவின் மனைவி, இப்படி இயேசு பிரானைப் பார்த்துக் கேட்கிறார். இவ்வுலகில் எல்லோருமே, அடக்கி ஆள வேண்டும் என்றல்லவா எண்ணுகிறார்கள். இவரும் அப்படி இருந்து விடுவாரோ என்ற எண்ணத்தில் இப்படிக் கேட்டிருக்கலாம். அதற்கு அவர், அவர்களை இப்படிக் கடிந்து கொள்கிறார்.

அதோடு மட்டும் நின்று விடாமல், செபதேயுவின் மக்களைப் பார்த்து, இப்படி ஒரு கேள்வியைத் தொடுக்கிறார். இக்கேள்வி அவர்களுக்கு மட்டும் உரியதன்று. எல்லோருக்கும் உரியது என்று எண்ண வேண்டும்.

‘என்னோடு துன்பத்தை நீங்களும் அனுபவிக்க முடியுமா?’ என்பதே அக்கேள்வி. அவர்கள் தரும் பதில் ‘நிச்சயம் முடியும்’ என்பதுதான். அவர்கள் கூறும் பதிலில் உண்மை இருந்தாலும், அதற்கு அவர் கூறும் வார்த்தை என்ன என்பதை சற்று உணர்ந்து கொள்வோம்.

என்னுடைய துன்பத்தில் நீங்கள் இணைந்து கொண்டாலும், என் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்வதற்கு அருள வேண்டியவர் நானல்ல. என் தந்தையே என்று கூறுகிறார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

தந்தையின் சித்தம் எப்படி உள்ளதோ? அப்படித்தான் எதுவும் நடக்கும் என்பதே, இந்நற்செய்தியின் உண்மைப் பொருள் ஆகிறது.

இந்த நற்செய்தியில் தொண்டு செய்வது எவ்வளவு சிறந்தது என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறார். தொண்டு ஒன்றுதான் மனித சமூகத்தை மலர்த்தும் என்பதற்கு இந்த நற்செய்தியை விட வேறு ஒரு சான்று தேவை இல்லை.

வரலாற்றுச் செய்தி ஒன்றைச் சொல்கிறார்கள். செபதேயு யார்? அவருடைய மக்களில் ஒருவர் யார்? என்ற செய்தியையும் இந்நற்செய்தி வாயிலாக அறிய முடிகிறது.

முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது, இயேசு பிரானோடு கூட இருந்தவர்தான் புனித யாக்கோபு என்பவர்.

பிற்காலத்தில் இப்படி இருக்கப் போகிறவர் என்று அறிந்ததினாலோ என்னவோ தொடக்கத்தில் இருவரையும் அழைத்து வந்து, செபதேயுவின் மனைவி இப்படி ஒரு வேண்டுகோளை வைக் கிறார்.

அதற்கு இயேசு பிரான், ‘நான் குடிக்கப் போகும் துன்பமான கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?’ என்ற வினாவைத் தொடுக் கிறார்.

அதற்கு அவர்கள், ‘முடியும்’ என்கிறார்கள். அந்த உறுதிப்பாடுதான், யாக்கோபை, புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்போம். இந்நற்செய்தியின் ஆழத்தை உணர்வோம். செயல்படுவோம். 

மேலும் செய்திகள்