ஆன்மிகம்
கர்வம் களைவோம்... கண்ணியம் காப்போம்...

சொர்க்கத்தில் சிறந்த அறிவு ஜீவியாக கருதப்பட்டு வந்த இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்க்காத காரணத்தால் அவன் மூலம் வெளிப்பட்டது தான் கர்வம் என்ற பண்பு.
ஊற்றுக்கண்ணில் இருந்து உபநதிகள் உற்பத்தியாகி ஓடி வருவது போல ‘கர்வம்’ என்ற ஊற்றுக்கண்ணில் இருந்து தான் ஆணவம், அகம்பாவம், இறுமாப்பு, தலைக் கனம், பெருமை, மமதை என்கின்ற அத்தனை கெட்ட குணங்களும் மனித உள்ளங்களில் உற்பத்தியாகிறது. 

அவை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வெளிப்பட்டு மனிதனை தவறான வழியில் நடக்கச்செய்து பாவம் என்ற படுகுழியில் தள்ளுகிறது. 

இது இப்போது தோன்றியது அல்ல. எப்போது ஆதிபிதா படைக்கப்பட்டார்களோ, அதற்கு முன்பே கர்வம், பெருமை போன்ற குணாதிசயங்கள் தோன்றி விட்டன. 

சொர்க்கத்தில் சிறந்த அறிவு ஜீவியாக கருதப்பட்டு வந்த இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்க்காத காரணத்தால் அவன் மூலம் வெளிப்பட்டது தான் கர்வம் என்ற பண்பு. 

அதை திருக்குர்ஆன் விவரிக்கும் போது: ‘‘நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்’ எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை’’. (7:11)

‘‘(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) ‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?’ என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)’ என்று (இறுமாப்புடன்) கூறினான்’’. (7:12)

இப்படி கர்வம் என்ற பண்பு எப்படி உருப்பெற்றது என்பதை மிக தெளிவாக எடுத்துரைக்கிறது திருமறை.

அதுபோல ‘பெருமை கொண்டு கர்வத்துடன் திரிபவர்களை இறைவன் நேசிப்பதில்லை’ என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

‘‘(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை’’. (31:18)

கர்வம் கொண்டவரால் உயிர் போகும் நிலையிலும் கூட தன் சுய கவுரவத்தை விட்டு கொடுக்க இயலாது. இதற்கு ஒரு சரித்திர சம்பவம் உதாரணமாய் இருக்கிறது.

பத்ர் யுத்த களத்தில் ஆக்ரோ‌ஷமான போர் நடக்கிறது. தளபதி அபு ஜஹில் கால்கள் துண்டிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக போர்க்களத்திலே வீழ்த்தப்பட்டு கிடக்கின்றான். 

அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்கள் தங்கள் வாளால் அவனது தலையை கொய்ய வருகிறார்கள். இன்னும் சில நிமிடங்கள் அவன் கதை முடிந்து போகும். 

அந்த கடைசி நேர சந்தர்ப்பத்திலும் கூட, அப்துல்லா இப்னு மசூத் (ரலி) அவர்களை அபு ஜஹில் தடுத்து நிறுத்தி, ‘என் தலையை கொய்ய நீதானா கிடைத்தாய்? குரைசியர் குலத்தின் தலைவன் என்ற கிரீடத்தை சுமந்த என் தலை உன் துருப்பிடித்த உடைந்த கத்தியாலா வெட்டப்படவேண்டும்? திரும்பி செல்! நல்ல ஒரு வீரனை அனுப்பு. நல்ல உடைவாளால் என் தலை சீவப்படுவதை நான் விரும்புகிறேன். அதன் மூலம் என் குலத்தின் பெருமை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் என் பேரவா’ என்றான். 

உயிர் மூச்சு நிற்கும் அந்த இறுதி நிலையிலும் தன் கர்வத்தை விட்டு கொடுக்க மறுத்தவன் அபு ஜஹில்.

தலைக்கனம், ஆணவம் என்பது ஒருவனை எந்த அளவிற்கு வழி கேட்டில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதற்கு அபுஜஹில் வரலாறு ஒரு உதாரணம். நரகம் உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தன் கர்வத்தை அவன் விட்டுக் கொடுக்கவில்லை. 

அதை திருக்குர் ஆன் (2:206) எடுத்துச் சொல்லும் போது: ‘‘அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்’’ என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்’’ என்று மிக தெளிவாக விளக்குகிறது.

கர்வம் கொண்டவர்களுக்கு எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அப்பால் ஒரு தண்டனையை அல்லாஹ் நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றான். அந்த தண்டனை எப்படிப்பட்டது என்பதை திருக்குர்ஆன்  (34:9) இவ்வாறு எச்சரிக்கிறது:

‘‘வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவைகளை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர் களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது’’.

உயிரோடு மண்ணில் புதைந்து போவதென்பது வேதனையின் உச்சம் என்றால், வானம் இடிந்து விழுந்து அழிந்து போவது அதைவிட கொடுமையானது. 

ஒருமுறை கண்மணி நாயகம் கூறும்போது, ‘பாவம் செய்பவர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள். நன்மை செய்யும் நல்லடியார்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்’ என்று சொன்னார்கள். 

உடனே அருகில் இருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நாயகமே! பாவம் செய்பவர் களைத் தானே எச்சரிக்க வேண்டும். நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயம் சொல்ல வேண்டும். தாங்கள் மாற்றிச் சொல்வதில் ஏதாவது உட்கருத்து பொதிந்து உள்ளதா?’ என்று வினவினார்கள்.

கருணை நபிகள் நாதர், ‘ஆயிஷாவே! பாவம் செய்பவர்கள் பாவத்தை உணர்ந்து தவ்பா செய்து கையேந்தி விட்டால் வல்ல ரஹ்மான் மனம் இளகி அவர்களை மன்னித்து புனிதப் படுத்தி விடுவான். ஆனால் நல்லடியார்கள், ‘எப்போதும் நாம் நன்மையைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்’ என்ற நினைப்பில், அது ஒரு எல்லையைத் தாண்டும் போது மமதை என்ற பெருமையை சைத்தான் அவர்கள் மனதில் விதைத்து விட்டால், அது வழி கேட்டில் கொண்டு விட்டு விடும். அதனால் அத்தனை நன்மைகளும் வீணாகி விடும். எனவே தான் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றேன்’ என விளக்கினார்கள். 

கர்வம் என்ற பாவம் அணு அளவேனும் நம்மில் வந்து விடாமல் காத்து கொள்வதே நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும்.

தழைய தழைய கரண்டைக்காலுக்கு கீழே ஆடை அணிவதும் கூட கர்வத்தின் அடையாளம். அதற்கான தண்டனை மிக கடுமையானது.

அல்லாஹ் தனது திருமறையில் (39:60) மிக தெளிவாக சொல்லி விட்டான்: ‘கர்வம் கொண்டவர்கள் செல்லுமிடம் நரகம் மட்டுமே’.

கர்வம் கொண்டவர்கள் இவ்வுலகிலும் கண்ணியம் குறைக்கப்பட்டு அழிவை தேடிக்கொள்வார்கள். மறுமையிலும் நரகத்தில் புகுத்தப்படுவார்கள் என்றால் அவர்கள் வாழ்ந்து தான் என்ன பயன்?

‘கர்வங்களை களைவோம், கருணை கொண்டு பிறரோடு சேர்ந்து வாழ்வோம்’. 

வல்ல ரஹ்மான் அத்தகைய வளம் நிறைந்த வாழ்க்கையை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன். 

எம். முஹம்மது யூசுப், உடன்குடி.