குடும்ப ஒற்றுமை தரும் சோமவாரம்

சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும்.

Update: 2017-08-15 00:30 GMT
21–8–2017  அமாவாசை  சோமவாரம்

சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.

கணவனை மீட்டெடுத்த சீமந்தினி

சித்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் மீது மன்னன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான்.

அந்த ஜோதிடர்களில் ஒருவர், ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பான்’ என்றார்.

ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டத்துடன் இருந்தார். அவரைக் கவனித்த மன்னர் அவருடைய கருத்தையும் கேட்டான். அதற்கு அந்த ஜோதிடர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள்’ என்றார்.

இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தான். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.

தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக் கவலையைக் கூறினாள்.

சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, ‘கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. உன்னுடைய துன்பங்கள் விலகும்’ என்றாள்.  

சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள்.

சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திர சேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோ‌ஷமாக வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது.

திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.

இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வெகு தூரத்தில் உள்ளவர்கள், தங்கள் இருப்பிடத்தை வந்தடைவர். கணவன்–மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. அப்படியே பிரிந்திருந்தாலும், அவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். மேலும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சிறப்புமிகுந்த விரதம் இதுவாகும். களத்திரதோ‌ஷம், மாங்கல்ய தோ‌ஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

விரதம் இருக்கும் முறை


சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கலாம். ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கக்கூடிய விரதங்களில் இதுவும் ஒன்று. சிவபூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய் உடைத்து, விநாயகரை வழிபட்டு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக் கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகே பூஜையை தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவ நாமங்களை பாராயணம் செய்து, தீபாராதனை காட்ட வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை, பார்வதி– பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்ய வேண்டும். புதுவேட்டி, ரவிக்கை துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம், தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து அவர்களிடம் இருந்து ஆசிபெற்றால் நாளும் சிறப்பு வந்து சேரும்.

நோய் தீர்க்கும் தீர்த்தக்குளம்

நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரியநாயகி சமேத கயிலாசநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வரும் திங்கட்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபடுவதோடு, சந்திர பகவானையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வரும் நாட்களிலும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் நீராடினால் தொழுநோய், சித்தபிரமை போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சந்திரனுக்கு அடைக்கலம் தந்த சிவன்

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை– வளர்பிறை உருவானது.

சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். ‘14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்.. நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.

மேலும் செய்திகள்